ஒரு ஞாயிறு காலை, ஒரு பெரிய மனிதர் தனது பால் கனியில் அமர்ந்து, சூரிய ஒளியை ரசித்துக் கொண்டே, காஃபி குடித்துக் கொண்டிருந்தார்.
அவரது கவனத்தை ஒரு சிறிய எறும்பு ஈர்த்தது. தன்னை விட எத்தனையோ மடங்கு பெரியதாக இருக்கும் இலை ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த பால்கனியின் ஒரு பக்கத்தில் இருந்து அடுத்த பக்கத்திற்கு, சென்று கொண்டிருந்தது. இந்த மனிதர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதனை கவனித்துக் கொண்டு இருந்தார். அந்த எறும்பு தன்னுடைய பயணத்தில், நிறைய இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. அது பல தடவைகள் நின்றும், திரும்பியும் தன்னுடைய இடத்தை அடைய, தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருந்தது.
அந்த பால் கனி தரையில் ஒரு இடத்தில் ஒரு சிறிய கீறல் இருந்தது. அந்த இடம் வந்தவுடன் எறும்பு சிறிது நேரம் நின்றது. அந்த சூழ்நிலையை அதாவது அந்தக் கீறலைத் தாண்டுவது எப்படி என்பது பற்றி, ஆராய்ந்தது.
பிறகு அந்த இலையை அந்த கீறலின் மேல் வைத்தது; அந்த இலையின் மேல் ஏறி அடுத்த பக்கம் வந்தது. பிறகு இலையை எடுத்துக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தது.
கடவுளின் படைப்பில், அந்த மிகச் சிறிய எறும்பின் புத்தி சாலித்தனம் அந்த மனிதரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த சம்பவம் அந்த மனிதரை பயபக்தியோடு, படைப்பின் அதிசயத்தைப் பற்றி சிந்திக்க வைத்தது.
இது படைத்தவனின் திறமையைக் காட்டியது.
உருவத்தில் மிகமிகச் சிறியதாக உள்ள இந்த எறும்புக்கும், ஒரு மூளை இருக்கிறது. சிந்தனை செய்ய; சூழ் நிலையை சமாளிக்க; காரணங்களைக் கண்டறிய; வெளிப்படுத்த; அதற்கு மேலாக கஷ்டங்களை எதிர்கொண்டு முன்னேற அந்த மூளை வேலை செய்கிறது.
சிறிது நேரம் கழிந்ததும், அந்த எறும்பு தன் இருப்பிடத்தை நெருங்கியது. தரையில் இருக்கும் ஒரு மிகச் சிறிய துவாரம் வழியாக, அது தன் இருப்பிடத்தின் உள்ளே நுழைய வேண்டும். அதன் இருப்பிடம் தரையில் அடியில் இருந்தது.
இந்த சின்னஞ் சிறிய துவாரத்தின் வழியாக இந்த எறும்பால், எப்படி இந்த இலையைக் கொண்டு செல்ல முடியும்? இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு தன் இருப்பிடம் வரை கொண்டு வந்ததை உள்ளே கொண்டு போக முடியவில்லையே என நினைத்தார்.
அந்த சிறிய எறும்பு, நிறைய துன்பங்களை அனுபவித்து, கஷ்டப்பட்டு, தன்னுடைய திறமையைக் காட்டி, அறிவைப் பயன்படுத்தி அந்த இலையை எடுத்து வந்த பின்பும், கடைசியில் தன் வீட்டிற்கு வெறும் கையோடுதான் திரும்பியது.
அந்த எறும்பு இவ்வளவு பெரிய இலையை, தன் வீட்டு சின்னஞ் சிறு துவாரம் வழியாக கொண்டு செல்ல முடியுமா என்பதை முதலில் நினைத்துப் பார்க்கவில்லை. தன்னுடைய சவால்கள் நிறைந்த பயணத்தின் முடிவு இப்படி ஆகும் என்றும் அது எதிர்பார்க்கவில்லை.
அந்த இலை அதற்கு உதவாமல் ஒரு சுமையாகவே மாறி விட்டது. அதைப் பற்றி எறும்புக்கு எவ்விதமான கவலையும் இல்லை.
சவால்களும், கஷ்டங்களும் நம் வாழ்க்கையில் வரும்போது, இந்த சிறிய எறும்பு போல், நம்மால் முழு நம்பிக்கையோடும்,தைரியத்தோடும், அவற்றை எதிர்கொள்ள முடியுமா? என்று வியப்படைந்தார்.
தன்னுடைய பயணத்தின் இறுதியில் அந்த எறும்பு இந்த இலையால் தனக்கு எந்த பயனும் இல்லை. அது வெறும் சுமையாகத்தான் இருந்தது என்று அதை விட்டுவிட்டு வேகமாகச் சென்றது.
நாம், நமது வாழ்க்கை எனும் பயணத்தில் அதிகமான ஆசைகளை சுமக்கிறோம். அதனை நிறைவேற்றவும் முயற்சி செய்கிறோம்.
ஆசைகளை பூர்த்தி செய்வதில்தான் நம் மகிழ்ச்சி இருக்கிறது. ஆசைகள் நிறைவேறாத போது நமக்கு ஏமாற்றம் வருகிறது. சில நேரங்களில், இந்த ஆசைகள் நமக்கு சுமையாகி, நமது பயணத்தின் முடிவை நாம் அடையும் வழியில், தடைகளாக இருக்கின்றன. அந்த எறும்பைப் போல, இதனை நாம் எளிதாக விட்டுவிட்டு முன்னேறிச் செல்ல முடியுமா?
நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன?
நமது வாழ்க்கையில் நாம் என்ன விரும்புகிறோம்?
இந்த எண்ணங்களில், அவர் ஆழ்ந்து மூழ்கி இருக்கும் போது, திடீரென்று வாசல் மணி ஒலித்தது. காஃபி கப்புடன் அவர், உள்ளே சென்றார்.
வெளியில் இருந்து பார்க்கும் போது, எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. ஆனால் அவருள்ளே சுழல் காற்று போல, புதிய எண்ணங்கள் எழுந்து கொண்டு இருந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக