ஒரு முறை ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில், காலியாக இருக்கும் வேலை ஒன்றிற்காக, ஒரு நேர்முகப் பேட்டி நடத்தினார்கள். அதிகமான பேர் தங்களது கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களோடு நேர் முகப் பேட்டிக்கு வந்தனர்.
ஆனால், அங்கு பேட்டி நடத்தும் அதிகாரிகள் சிறிது வித்தியாசமான முறையில் கேள்விகள் கேட்டனர்.
நேர்முகத் தேர்வுக்கான மணி ஒலித்தது. பியூன் முதல் நபரை அழைத்தார்.
அந்த இளைஞன் தன்னுடைய சான்றிதழ்களுடன் அந்த அறையை நோக்கிச் சென்றான். கதவைத் திறந்து கொண்டே, உள்ளே நுழைய அனுமதி கேட்டான். அதிகாரி வரலாம் என பதில் சொன்னார். அந்த இளைஞன் நன்றி கூறி விட்டு, உள்ளே நுழைந்து அந்த அதிகாரியின் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அந்த அதிகாரி அவனது சான்றிதழ்களை வாங்கி பார்த்து விட்டு மிக நல்லது என்றார்.
நான் உங்களிடம் இப்போது ஒரு நிகழ்ச்சி பற்றி கூறுகிறேன் என்றார். இரண்டே இரண்டு இருக்கைகள் உள்ள ஒரு காரை ஓட்டிக் கொண்டு நீங்கள் ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டு இருக்கிறீர்கள். ஒரு பேரூந்து நிறுத்தம் அருகே நீங்கள் வரும் போது, அங்கு மூன்று பேர் நிற்பதைப் பார்க்கின்றீர்கள்.
அதில் ஒருவர் சுமார் 90 வயதான பெண் மணி. அவள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவள் சிகிட்சைக்காக உடனே மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டும்; இல்லை எனில் இறந்து விடுவாள்; மரணத் தறுவாயில் இருக்கும் நிலை.
இரண்டாவது, உங்களது உற்ற நண்பர். அவர் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்தவர். இன்று நீங்கள் இவ்வளவு தூரம் உயர்ந்த நிலைமைக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்.
மூன்றாவது, உங்களை அன்போடு நேசிக்கும், உங்கள் பெண் சினேகிதி. ஆனால் உங்கள் காரில், ஒருவருக்குத்தான் இடம் இருக்கிறது. நீங்கள் யாருக்கு இடம் கொடுப்பீர்கள்? என்று கேட்டார்.
அந்த இளைஞன் கண நேரம் சிந்தித்து விட்டு சார், “நான் சினேகிதிக்குத்தான் காரில் இடம் கொடுப்பேன்” என்றான்.
அந்த அதிகாரி,“ நீங்கள் அந்த இருவருக்கும், உதவி செய்யாமல் இருப்பது தவறுதானே?” என்றார்.
அதற்கு, அந்த இளைஞன், “இல்லை சார். அந்த வயதான பெண் இன்றோ அல்லது நாளையோ இறப்பது உறுதி என்றாகி விட்டது. என்னுடைய நண்பனை நான் எப்போதாவது சந்தித்துக் கொள்ளலாம். நான் இப்போது என் சினேகிதியை விட்டு விட்டால், அவளை நான் மீண்டும் பார்க்கவே முடியாது” என்றான்.
அந்த அதிகாரி புன்சிரிப்போடு, “உன்னுடைய நேர்மையான பதில்களைக் கேட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீ இப்போது போகலாம் “ என்றார். நன்றி தெரிவித்து விட்டு அந்த இளைஞன் வெளியே வந்தான்.
அடுத்த நபரை அனுப்பும்படி பியூனிடம் கூறினார். இவ்வாறாக வந்த அனைவரிடமும் இதே கேள்விதான், கேட்கப்பட்டது. அனைவருமே, வெவ்வேறான பதில்களை கூறினார்கள்.
சில பேர் வயதான பெண்மணியை அழைத்துச் செல்வோம், என்றனர்; சிலபேர் நண்பனுக்குக் காரில் இடம் கொடுப்போம் என்றனர்; மேலும் சில பேர் சினேகிதிக்கு இடம் கொடுப்போம் என்றனர்.
இவ்வாறாக நேர்முகத் தேர்வு, அதிக நேரமாக நடந்து கொண்டு இருந்தது.
இதே கேள்வியை அதிகாரி நேர்முகத் தேர்விற்கு வந்த ஒரு நபரிடம் கேட்ட போது, “ சார், நான் காரின் சாவியை என் நண்பனிடம் கொடுத்து, அந்த வயதான பெண்மணியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, காரை உன் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. நான் பிறகு காரை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி விட்டு என் சினேகிதியுடன் நான் பேரூந்தில் செல்வேன்” என் பதில் கூறினான்.
இந்த பதிலைக் கேட்டவுடன், அந்த அதிகாரி தன் இருக்கையை விட்டு எழுந்து, அந்த இளைஞரின் கையைக் குலுக்கினார். புன் சிரிப்போடு, “நீங்கள் மிகச் சிறந்தவர். உங்களை நான் இந்தப் பணிக்கு தேர்ந்தெடுத்து விட்டேன்” என்றார்.
மிகவும் நன்றி சார், என்று கூறி விட்டு அந்த இளைஞன் மிகவும் சந்தோஷமாக அறையை விட்டு வெளியே வந்தான்.
இறுதியாக அந்த நேர்முகத் தேர்வு ஒரு முடிவுக்கு வந்தது.
சில நேரம் நாம் ஒரு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர, அந்த பிரச்சனையின் ஒரே ஒரு அம்சத்தை மட்டும்தான் பார்க்கிறோம். அதே வேளையில், அந்த பிரச்சனையின் தீர்வானது, நாம் அனைத்து அம்சங்களையும் ஒட்டு மொத்தமாக கவனித்துப் பார்த்தால் மட்டுமே கிடைக்கும்.
வாழ்க்கையில் ஒருவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக