ஒரு முறை ஒரு சிறந்த தத்துவ ஞானி புத்தரைப் பார்ப்பதற்காக வந்தார். புத்தரிடம் கேட்பதற்காக அவர் நிறைய கேள்விகளை தன் வசம் வைத்திருந்தார். அவர், புத்தரிடம் வந்து கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்.
புத்தர் அவரைக் கவனமாகப் பார்த்துவிட்டு,“ உண்மையாகவே உங்களுக்குப் பதில் தேவையா?” என்று கேட்டார். அப்படி என்றால் அதற்குரிய விலையை உங்களால் கொடுக்க முடியுமா ?
அந்த தத்துவஞானி,“ என் வாழ் நாள் முழுவதுமாக நான் விடைகளைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். நிறைய விடைகளைப் பெற்றேன்; ஆனால் ஒவ்வொரு விடைக்கும் பின்னால், புதிய கேள்விகள் எழுந்தன. நீங்கள் என்ன விலை கேட்கின்றீர்கள்? நான் முழு விலையையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். இந்த கேள்விகளுக்கான விடைகளுக்காக நான் ஏக்கத்தோடு இருக்கிறேன். இந்த கேள்விகளுக்கான பதில்களோடுதான் நான் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என ஆவல் கொண்டுள்ளேன்” என்று பதில் கூறினார்.
புத்தர் கூறினார், “ மிக நல்லது. நிறைய மக்கள் விடைகளைத் தெரிய ஆசைப் படுகிறார்கள். ஆனால், அதற்குரிய விலையைக் கொடுக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால்தான், நான் உங்களிடம் இப்படிக் கேட்டேன்” .
ஒரு வருடம் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். இதுதான் விலை. என் அருகே அமைதியாக ஒரு வருடம் அமர வேண்டும். ஒரு வருடம் சென்ற பிறகு, நானே உங்களிடம் கேள்விகளை சொல்லும் படி கேட்பேன். பிறகு உங்களுக்கு ஏதாவது கேள்வி என்னிடம் கேட்க விரும்பினால், நான் எல்லாவற்றிற்கும் விடை அளிப்பேன் என்று புத்தர் உறுதி மொழி கொடுத்தார். உங்களுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து விடுகிறேன் என்றார்.
ஆனால், ஒரு வருடம் முழுவதுமாக, அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு உங்களுடைய கேள்விகளை என்னிடம் கொண்டு வரக்கூடாது.
அந்த தத்துவ ஞானி யோசித்துக் கொண்டிருந்தார். சரி என்று சொல்லவா? அல்லது வேண்டாமா! ஒரு வருடம் என்பது மிகவும் நீண்ட காலம். இவர் உண்மையில் ஒரு வருடத்திற்குப் பிறகு கேள்விகளுக்கு பதில் தருவாரா? என தனக்குள் நினைத்துக் கொண்டார்.
அவர் புத்தரிடம்,“ ஒரு வருடத்திற்குப் பிறகு என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை தருவீர்கள் என்பதற்கு முழு உறுதி மொழி கொடுக்க முடியுமா ?“ என்று கேட்டார்.
“ நான் உங்களுக்கு முழுவதுமாக உறுதி மொழி தருகிறேன் “ என்று புத்தர் பதில் கூறினார். நீங்கள் கேட்பீர்கள் என்றால் நான் பதில் தருவேன், ஆனால் நீங்கள் கேட்கவில்லை என்றால், நான் யாருக்கு விடை கூற முடியும்.
அந்த நேரத்தில், அருகில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த சீடர் ஒருவர் சிரிக்கத் தொடங்கினார்.
அந்த தத்துவஞானி புத்தரிடம், “ஏன் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் ?” என்று கேட்டார். புத்தர்,“நீங்கள் அங்கு சென்று அவரிடம் கேளுங்கள்.” என்று பதில் கூறினார்.
தத்துவஞானி அந்த சீடரிடம் சென்று, ஏன் சிரிக்கிறீர்கள், என்று கேட்டார்.
அந்த சீடர்,“ உங்களுக்கு ஏதாவது கேட்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால், இப்போதே கேட்டு விடுங்கள். அவர் இதையேதான் எனக்கும் செய்தார். ஆனால், உண்மையைத்தான் சொல்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். ஒரு வருடத்திற்குப் பிறகு நீங்கள் என்ன கேட்டாலும், அவர் பதில் சொல்வார். ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு யார் கேட்கப் போகிறார்கள் ?” என்று பதில் கூறினார்.
நான் ஒரு வருடமாக இங்கு மவுனமாக உட்கார்ந்து இருக்கிறேன். இப்போது புத்தர் என்னிடம் “கேள்வி கேளுங்கள், சகோதரரே” என்று என்னை உத்வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு வருட காலமாக அமைதியாக உட்கார்ந்த பிறகு, எதுவுமே கேட்பதற்கு இப்போது இல்லை; எல்லா விடைகளும் பெறப்பட்டு விட்டன. உங்களுக்கு கேட்கவேண்டும் என்ற ஆசை இருந்தால், இப்போதே கேளுங்கள்; அப்படி இல்லை எனில், ஒரு வருடத்திற்குப் பிறகு, எதுவுமே கேட்பதற்கு இருக்காது.
பதில்கள் தெரிய வேண்டும் என விரும்பியதால், அந்த தத்துவஞானி புத்தருடன் அங்கே தங்கினார். தினமும் அமைதியாக அமர்ந்து கொள்வார். காலத்தைப் பற்றி அவர் மறந்து விட்டார்; ஏனென்றால் அவரது எண்ணங்களின் வேகம் குறைந்து விட்டன; காலம் பற்றிய விழிப்புணர்வை அவர் இழந்து விட்டார்.
ஆனால், புத்தர் காலம் பற்றி முழு விழிப்புணர்வோடு இருந்தார். ஒரு வருடம் முடிந்தது. புத்தர், அந்த தத்துவ ஞானியிடம் சென்று, “இப்போது உங்களுக்கு என்ன தேவையோ, அதைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உறுதி மொழி கொடுத்த படி ஒவ்வொரு கேள்விக்கும் விடை தருகிறேன். உங்களிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கிறதா ?’ என்று கேட்டார்.
அந்த தத்துவஞானி சிரித்துக் கொண்டே கூறினார்,“அந்த சீடர் கூறியது மிகவும் சரி. ஒரு வருடமாக நான் இங்கு அமர்ந்து கொண்டிருந்த பிறகு, எனக்கு கேட்பதற்கென்று இப்போது எதுவுமே இல்லை. உங்களுடைய அருளாசியின் மூலமாக, அனைத்து பதில்களும் என்னிடம் வந்து விட்டன “.
பதில்கள் கொடுக்கப் படவில்லை, ஆனால் பெறப்பட்டன.
பதில்கள் வெளியே இருந்து வரவில்லை, ஆனால் அவை உள் இருந்து வந்தன.
கருத்துகள்
கருத்துரையிடுக