ஒரு காலத்தில் ஒரு பயணி, பயணம் செய்த களைப்பால் ஓய்வெடுக்க விரும்பினார். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்கு தகுந்த ஒரு இடத்தை பார்த்துத் தேடிக் கொண்டு இருந்தார்.
திடீரென்று அவர் கண்களுக்கு ஒரு ‘ஆஷ்ரமம்’ தென்பட்டது. அது மிகச் சிறந்த தத்துவ ஞானியான சாக்ரடீஸின் ஆஷ்ரமம் ஆகும். மிகவும் நல்லது. நான் இங்கு சில நாட்கள் தங்குவதற்கும், உள்ளார்ந்த சிந்தனைகளையும், பேருரைகளையும் கவனித்துக் கேட்பதற்கும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.
இந்த எண்ணத்தோடு அவர் சாக்ரடீஸை சென்று பார்த்தார். அவர் அங்கு தங்குவதற்கு சாக்ரடீஸ் உடனே சம்மதித்தார். அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அவரது சொந்த அறைக்கு எதிர் பக்கத்தில் இருந்த அறையை அந்த பயணி தங்குவதற்குக் கொடுத்தார்.
ஒரு நாள் அந்தப் பயணி அவர் அறையில் இருந்து வெளியே வரும்போது, எதிர் அறையில் சாக்ரடீஸ் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அதற்கு மிகுந்த கவனமும் கொடுக்கவில்லை.அதைப் பார்த்ததற்காக எந்த வித முக்கியத்துவமும் கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்தார்.
ஆனால், இதே நிகழ்ச்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவை நடந்த போது, அவரால் அவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. மேலும் அவர், சாக்ரடீஸ் அப்படி ஒன்றும் அழகானவர் அல்ல. ஏன் இவர் தினமும் தன்னை வெகு நேரமாக கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்? என்று நினைக்கத் தொடங்கினார்.
இந்த எண்ணப்புயல் அவர் மீது தாக்குதலை ஏற்படுத்தியது. இறுதியாக அவரை அவரால் நிறுத்த முடியாமல், சாக்ரடீஸின் அறைக்கு நேராகச் சென்றார், “ தயவு செய்து நீங்கள் ஏதும் மனதில் தவறாக எடுக்காமல் இருந்தால், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அந்த கண்ணாடி முன் வெகு நேரம் ஏன் நிற்கின்றீர்கள்? இருந்த போதிலும் நீங்கள் .. … என்று தொடராமல் நிறுத்தினார்.
சாக்ரடீஸ் அவரது கேள்வியைப் புரிந்து கொண்டு தொடர்ந்தார், “ஆமாம். நான் அழகில்லாதவன்தான்; பார்ப்பதற்கும் நான் நன்றாக இல்லை. என்னுடைய அழகின்மையை விழிப்புணர்வோடு இருப்பதற்காகத்தான், நான் தினமும் கண்ணாடி முன்னே நின்று வெகு நேரம் பார்க்கிறேன்” என்றார்.
பயணி – ஏன் உங்கள் அழகின்மையைப் பற்றி தினமும் ஞாபகப் படுத்திட வேண்டும்? அது உங்களுக்கு, ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும் அல்லவா?
சாக்ரடீஸ் – இல்லை! நான் எதிர் மறையாக எண்ணவில்லை. என்னுடைய அழகின்மை என்னை விழிப்புணர்விற்கு ஆளாக்கும்.
பயணி – விழிப்புணர்வா? அது எப்படி?
சாக்ரடீஸ் – இது என்னை விழிப்புணர்விற்கு இட்டுச் செல்கிறது. என்னுடைய புனிதமான மற்றும் நல்ல செய்கைகள் மூலம் என் அழகின்மையை நான் ஈடு செய்கிறேன்.
உயர்ந்த எண்ணங்களும், நல்ல செய்கைகளும் ஒரு மனிதனின் உள் அழகை மேம்படுத்துகின்றன. உள்முக அழகு விழிப்படைந்தால், வெளிப்புற அழகின்மையால் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது.
மிகச் சிறந்த போதகரான சாக்ரடீஸின் இந்த எண்ணங்களைக் கேட்டு, அந்த பயணி அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்து அவரது பாதங்களில் குனிந்து, விழுந்து வணங்கினார். பிறகு எழுந்து அறையை விட்டு வெளியேற புறப்படும் போது சாக்ரடீஸின் குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது. “மகனே கவனி, நீயும் கூட கண்ணாடியைப் பார்க்க வேண்டும்” என்றார்.
அந்தப் பயணி மிகவும் மென்மையான குரலில் ‘ஆம்’ என்றார்.
சாக்ரடீஸ், “ஏன் என்று தெரிந்திட நீ விரும்பவில்லையா? ஏனென்றால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய்; நன்றாகவும் இருக்கிறாய். அந்தக் கண்ணாடி உனக்கும் கூட பாடம் கற்றுத் தரும்!” என்றார்.
நீ தோற்றத்தில் அழகாக இருப்பதால், அழகான செயல்களை செய்யும்படி, அது உனக்கு ஞாபகப்படுத்தும்.
உண்மையான அழகு வெளியேயும் இருக்கிறது, உள்ளேயும் இருக்கிறது. உள்முகமான அழகு இல்லை எனில், வெளியே இருக்கும் அழகு அர்த்தம் இல்லாதது மற்றும் நிறைவு அடையாதது என்பதாகும்.
வாழ்க்கையில் எத்தனையோ இன்னல்கள் இருக்கின்ற போதிலும், நாம் விரும்பினால், நாம் நம்மையே உத்வேகப்படுத்திட இயலும்; உண்மையில் வேண்டியது என்னவெனில், நேர்மறையான எண்ணங்களும், உணர்வுகளும்தான்!
கருத்துகள்
கருத்துரையிடுக