முன்னொரு காலத்தில் அமர்சென் என்ற ஒரு புத்திசாலி மனிதர், ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவரவர் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
அமர்சென்னுக்கு வயதாகி விட்டது. அவரது மனைவியும் இறந்து விட்டாள். தன்னுடைய பணம் சொத்துக்களை முறைப்படி, கொடுக்க தீர்மானித்தார். இந்த முடிவுக்கு வந்த பிறகு, தன்னுடைய மகன்கள், மருமகள்களை அழைத்தார். ஒவ்வொரு ஜோடிக்கும் அதாவது ( ஒரு மகன், மருமகள் இவ்வாறு நான்கு ஜோடிகள்).
ஒவ்வொருவருக்கும் ஐந்து கோதுமை தானியங்களைக் கொடுத்தார். எண்ணி ஐந்தே ஐந்து கோதுமைகள் தான். நான் இப்போது, தீர்த்த யாத்திரை செல்கிறேன். நான்கு வருடங்கள் கழித்து திரும்பி வருவேன். நான் திரும்பி வரும் வரை இந்த கோதுமைத் தானியங்களை யார் முறைப் படி, கவனமாக வைத்துள்ளார்களோ, அவர்களுக்குத்தான் என்னுடைய சொத்து முழுவதும் சேரும், என கூறி விட்டு சென்றார்.
முதல் மகனும், மருமகளும் இந்த வயதான கிழவருக்கு என்ன வாயிற்று. நான்கு வருடங்களாக இந்த ஐந்து கோதுமைகளைப் பற்றி யார் ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். எப்படியும் நாம்தான் மூத்தவர்கள். சொத்துக்கு முதல் உரிமை நமக்குத்தான் என்ற எண்ணத்துடன், அந்த கோதுமைத் தானியங்களை தூக்கி எறிந்து விட்டனர்.
இரண்டாவது மகனும், மருமகளும் இந்த தானியங்களைப் பாதுகாத்து வைப்பது மிகவும் கஷ்டம் இந்த தானியங்களை நாம் சாப்பிட்டால் இதில் ஏதோ நல்லது இருக்கும். அப்பாவும் மகிழ்ச்சி அடைவார். திரும்பி வந்ததும் நம்மை வாழ்த்தி, சொத்து முழுவதும் நமக்குக் கொடுப்பார் என முடிவு செய்து, அந்த தானியங்களை இருவரும் சாப்பிட்டனர்.
மூன்றாவது மகனும், மருமகளும் மிகவும் மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் உடையவர்கள். கோவிலில் இருக்கும் கடவுள் சிலைகளை பாதுகாப்பது போல், இந்த தானியங்களையும் நாம் பாதுகாத்து வைத்து, அப்பா வந்தவுடன் பத்திரமாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
நான்காவது மகனும் மருமகளும் இதைப் பற்றி அறிவு பூர்வமாக சிந்தனை செய்தார்கள். அவ்விருவரும் அந்த ஐந்து கோதுமை தானியங்களையும், பூமியில் விதைத்தனர். செடிகள் வளர்ந்தன. கொஞ்சம் கோதுமைகள் கிடைத்தன. அதையும் அவர்கள் விதைத்தனர். இவ்வாறு ஒவ்வொரு வருடமும், கோதுமை தானியங்களின் அளவை அதிகரித்தனர்.
அந்த ஐந்து கோதுமைகள், இப்போது ஐந்து சாக்குகள் ஆகி, இருபத்தைந்து சாக்குகள் ஆகி, பிறகு ஐம்பது சாக்குகளாக அதிகரித்து விட்டன.
நான்கு வருடங்கள் கழிந்தன. அமர் சென் திரும்பி வந்தார். நான்கு ஜோடிகளையும் அழைத்தார். கோதுமையை அவர்கள் என்ன செய்தனர், என்பதைப் பற்றி கேட்டார்.
நான்காவது மகனிடமும் மருமகளிடமும் அவர் கேட்ட போது அந்த மகன், “அப்பா, நீங்கள் கொடுத்த அந்த கோதுமைகள், இப்போது 50 சாக்கு மூட்டை கோதுமைகளாக மாறிவிட்டன. அவற்றை பத்திரமாக உணவுக் களஞ்சியத்தில் வைத்து இருக்கின்றோம். அவை இப்போது, உங்களுக்குத்தான் என்றனர்.
இதைக் கேட்டவுடன் அமர்சென் மகிழ்ச்சி அடைந்து உடனே பணப் பெட்டியின் சாவிகளை நான்காவது மகன், மருமகளிடம் கொடுத்தார். நீங்கள் இருவரும்தான் என்னுடைய சொத்துக்கு உண்மையான வாரிசு என்றார்.
ஒரு சின்னஞ்சிறு ஆரம்பம், எந்த அளவு ஒரு பெரிய நிலையில் தன்மை மாற்றம் அடையச் செய்ய முடியும் என்பதற்கு இந்த ஐந்து தானிய விதைகள், ஒரு அடையாளம். அதே போல, சின்னஞ்சிறு பொறுப்பு, என்பதை கையில் இருக்கும் ஆதாரத்தை வைத்து, மிகச் சிறந்த அளவுக்கு நிறைவேற்ற முடிகிறது என்றால், அது அற்புதமான விளைவுகளை எடுத்துக் கொண்டு வரும் என்பதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக