ஒரு கணவனும் மனைவியும் அவர்களது திருமணம் ஆண்டு நிறைவு விழா முடிந்த அன்று, தேநீர் அருந்திக் கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரும் மற்றவர் பார்வையில் சிறந்த தம்பதிகள். இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் இருந்தனர். சில சமயங்களில் சிறுசிறு சச்சரவுகள் அவர்களுக்கு இடையே நிகழும்.
அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது, மனைவி ஒரு கருத்தைக் கூறினாள். உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் என்னிடம் உள்ளன. நம் இருவருக்கும் பேசுவதற்குக் கூட நேரம் கிடைப்பது இல்லை. எனவே, நான் இரண்டு டைரிகளை வாங்கி இருக்கிறேன். இந்த வருடம் முழுவதும் நாம் பேச வேண்டியதை இந்த டைரியில் எழுதுவோம். அடுத்த வருடம் இதே நாளில், நாம் இருவரும் இந்த டைரியை படிக்க வேண்டும். அதில் இருக்கும் விஷயங்களை கவனித்து, அதை சரிசெய்ய, நாம் இருவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். கணவனுக்கும் இந்தக் கருத்து பிடித்து இருந்ததால், அதற்கு உடனே சம்மதித்தான். இருவரும் தத்தம் டைரியை எடுத்துக் கொண்டனர்.
ஒரு வருடம் கழிந்தது. அந்த திருமண ஆண்டு விழா அன்று, அவர்கள் இருவரும், தங்கள் டைரிகளை மாற்றிக் கொண்டார்கள். ஏற்கனவே அவர்கள் முன்பே தீர்மானித்தபடி டைரியை படிக்கத் தொடங்கினர். கணவர் முதலில் மனைவியின் டைரியை படிக்கத் தொடங்கினார். முதல் பக்கத்தில், இது நமது கல்யாண நாள். நீங்கள் எனக்கு அழகான பரிசு தரவில்லை. இரண்டாவது பக்கத்தில், என்னை நீங்கள் டின்னருக்காக ரெஸ்டாரெண்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. மூன்றாவது பக்கத்தில், நீங்கள் என்னை சினிமாவுக்கு அழைத்து செல்வதாக முதலில் வாக்குக் கொடுத்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில், எனக்குக் களைப்பாக இருக்கிறது; இன்று சினிமாவுக்குப் போக வேண்டாம் என்று முடிவு செய்தீர்கள். என்னுடைய உறவினர்கள் வந்திருக்கும் போது, நீங்கள் அவர்களிடம் சரியான முறையில், பேசவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு இன்று எனக்கு ஒரு புடவை வாங்கி வந்தீர்கள். அது மிகவும் பழைய மாடலாக இருந்தது.
இது போல நிறைய மோசமான குற்றச் சாட்டுக்கள் அந்த டைரியில் எழுதப்பட்டு இருந்தன. கண்ணீர் மல்க கணவர் டைரியை படித்து முடித்தார்.
தன் மனைவியிடம்,“ என்னை மன்னித்து விடு. நான் வருத்தப்படுகிறேன். இது வரைக்கும் இப்படிப் பட்ட தவறுகள் பற்றி, நான் அறிய வில்லை. இனிமேல் இவ்வாறான தவறுகளை திரும்பவும் செய்யாமல், நல்லதை செய்ய முயற்சி செய்கிறேன்” என்றார்.
இப்போது மனைவி கணவனின் டைரியை எடுத்தாள். முதல் பக்கம் ஒன்று எழுதாமல் இருந்தது. இரண்டாவது, மூன்றாவது … …. ……என எல்லாமே வெற்றிடமாக இருந்தது. 50 முதல் 60 பக்கங்கள் வரை திருப்பினாள். அனைத்தும் காலியாகவே இருந்தன. மனைவி மிகவும் ஏமாற்றம் அடைந்தாள். எனக்குத் தெரியும், உங்களால் என்னுடைய இந்த சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாது என்று கோபம் அடைந்தாள். நான் மிக அதிகமான முயற்சி எடுத்து, என் மனதில் உள்ள அனைத்தையும், இந்த ஒரு வருடமாக உங்களுக்கு எழுதி வைத்து இருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்காக இதைக் கூட செய்யாமல் இருந்திருக்கிறீர்கள்.
இதைக் கேட்ட கணவன் புன் சிரிப்போடு, கடைசி பக்கத்தில் நான் அனைத்தையும் எழுதி இருக்கிறேன் என்று அன்பாகக் கூறினான். மனைவி ஆவலோடு கடைசி பக்கத்தை திருப்பினாள். “ உன்னை எப்படி குறை கூற முடியும்? வருடம் முழுவதும் என்னிடமும், என் குடும்பத்தினரிடமும் நீ காட்டிய ஈடு இணையற்ற அன்பின் முன், நான் என்ன குறையைக் கண்டு பிடித்து, இந்த டைரியில் எழுத முடியும்? நீ தவறே செய்யாதவள் அல்ல.
உன்னுடைய அன்பு, அர்ப்பணிப்பு, எங்களுக்காக நீ செய்த தியாகம் – இவற்றின் முன் உன்னுடைய சிறிய தவறுகள் எல்லாம், ஒன்றுமே இல்லாமல் மறைந்து விட்டன”.
நான், மன்னிக்க முடியாத, எண்ணிக்கையில் அடங்காத தவறுகளை செய்த போதும், என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நீ எனது நிழல் போல் இருந்து, உதவி செய்து இருக்கிறாய். எனது சொந்த நிழலில் நான் குற்றம் காண முடியுமா?
இதைப் படித்தவுடன், மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. கணவனிடம் இருந்த தன் டைரியை வாங்கி இரண்டையும் தீயில் இட்டாள். அத்துடன், தனது வேறுபாடுகள், குறைகள் அனைத்தையும் தீயில் கருக்கி விட்டாள்.
புதிதாக மணம் செய்த தம்பதிகளைப் போல, திரும்பவும் அவர்கள் வாழ்க்கை, அன்பின் துணையோடு மலர்ந்து மணம் வீசியது.
கருத்துகள்
கருத்துரையிடுக