தன்னுடைய வாழ்வின் இறுதி நாள் நெருங்கிக் கொண்டு இருப்பதை அறிந்த தந்தை ஒருவர், தன் மகனை அழைத்து,“ தரம்பால்! என் அன்பு மகனே, நீ என்னுடைய ஒரே வாரிசாக இருந்தும், நான் உனக்காக எந்த விதமான செல்வத்தையும் சேர்த்து வைக்கவில்லை. நான் எப்போதும் உண்மையாக இருந்தேன்; நேர்மையாக இருந்தேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். நீ எப்போதும் உன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும்; வெற்றி அடைபவனாகவும் இருப்பாய், என்று உனக்கு ஆசிகள் வழங்குகிறேன் என்றார். நீ எதைத் தொட்டாலும், அது பொன்னாக மாறும் என் மகனே!” என்றார். தரம்பால் நன்றி உணர்வோடு தலை தாழ்த்தி, அவரது அப்பாவின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.
அப்பா, மிக அன்போடு தன் மகனின் தலையின் மீது கை வைத்து, அமைதியாக; திருப்தியாக தன் இறுதி மூச்சை விட்டார்.
அப்பாவின் மறைவிற்குப் பிறகு, வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு தரம்பாலுக்கு வந்தது.
அவர் சிறிய அளவில் ஒரு கைத் தொழிலை ஆரம்பித்தார். அந்த தொழில் நன்கு நடந்து வளர்ச்சி அடைந்தது. பிறகு ஒரு சிறிய கடையை வாங்கினார். படிப்படியாக, தன் தொழிலை அபிவிருத்தி அடையச் செய்தார். விரைவில் அந்த நகரில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர்களில் அவரும் ஒருவரானார். தனது அப்பாவின் ஆசிகள்தான் தன்னை இந்த நிலைமைக்கு உயர்த்தின என்பதை அவர், உண்மையாக நம்பினார். அவரது அப்பா எப்போதும் தன் பொறுமையை விட்டுவிடுவது இல்லை.
எல்லா விதமான கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டார். தன்னுடைய நம்பிக்கையையும், நேர்மையையும் எப்போதும் இழந்தது இல்லை. இவை எல்லாமே அவரது சொற்களுக்கும், ஆசிகளுக்கும் சக்தி கொடுத்தன. அந்த ஆசிகளும் கனியும்படி செய்தன. தரம்பால் இதை எப்போதும் எல்லோரிடமும் கூறிக் கொண்டே இருப்பார். தன்னுடைய வெற்றிகளுக்கு அப்பாவின் ஆசிகள்தான் காரணம் என்பார்.
ஒரு முறை தரம்பாலின் நண்பர் ஒருவர் அவரிடம், “ உங்கள் அப்பா மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றால், அவரால் ஏன் வசதியாக, சந்தோஷமாக வாழ முடியவில்லை?” என்றார்.
அதற்கு தரம்பால், “நான் என் அப்பா சக்தி வாய்ந்தவர் என்று கூறவில்லை. என் அப்பாவின் ஆசிகள்தான் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றுதான் கூறினேன்” என்றார். இவ்வாறாக, தரம்பால் எப்போதும் தன் அப்பாவின் ஆசிகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பதால், மக்கள் அவருக்கு “அப்பாவின் ஆசிகள்” என்ற பெயரைக் கொடுத்தனர். இதைப் பற்றி தரம்பால் தன் மனதில் தவறாக ஏதும் நினைக்கவில்லை. இதுவும் தனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. தன் அப்பாவின் ஆசியால் இதனால் நான் மேலும் சிறந்தவன் ஆகிறேன் என்றார்.
வருடங்கள் கடந்தன.
தரம்பால் தன்னுடைய தொழிலை அயல் நாடுகளுக்கும் விரிவடையச் செய்தார். அவர் எங்கெல்லாம் சென்று, வியாபாரம் செய்தாரோ, அங்கெல்லாம் அவர் லாபமே அடைந்தார்.
தரம்பாலுக்கு ஒரு ஆர்வம் தோன்றியது. எப்போதும் லாபம் கிடைத்துக் கொண்டே இருக்கும் தனக்கு, நஷ்டம் ஏற்படும் அனுபவம் வேண்டும் என நினைத்தார். தன்னுடைய நண்பர் ஒருவரிடம், “எனக்கு நஷ்டம் வரும்படியான ஒரு தொழில் பற்றி கூறு” என ஆலோசனை கேட்டார். தரம்பால், தன்னுடைய வெற்றி, பணம் இவற்றால் மிகவும் கர்வமாக இருப்பதாக அந்த நண்பர் நினைத்தார். இவனுக்கு உண்மையிலேயே நஷ்டம் வரும் தொழிலைப் பற்றி நாம் ஆலோசனை கூற வேண்டும் என முடிவு செய்தார். தரம்பாலிடம் இந்தியாவில் இருந்து கிராம்புகளை வாங்கிக் கொண்டு, ஆப்ரிக்காவில் இருக்கும் ஜான்சிபார் என்ற தீவிற்குக் கொண்டு சென்று அங்கு விற்கலாம் என கூறினார். தரம்பால், நண்பர் கூறிய கருத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.
ஜான்சிபார் கிராம்புகளுக்கு புகழ்பெற்ற இடம். அங்கிருந்துதான் இந்தியாவுக்கு கிராம்புகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்குள்ள கிராம்பு இந்தியாவில் 10 முதல் 12 மடங்கு வரை, அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. கிராம்பை இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு விற்றால், உறுதியாக நஷ்டம்தான் கிடைக்கும். இதனை நாம் செய்ய வேண்டும் என தீர்மானித்தார். அப்பாவின் ஆசிகள் இதில் எப்படி உதவி செய்கின்றன என்று பார்க்க வேண்டும் என முடிவு செய்தார். இந்தியாவில் இருந்து கிராம்புகளை வாங்கி, கப்பலில் நிரப்பினார்; ஜான்சிபார் தீவுக்கு வியாபாரம் செய்ய அவரே சென்றார்.
ஜான்சிபார் சுல்தான்களின் ஆட்சி நடக்கும் ராஜ்ஜியம் ஆகும். தரம்பால் கப்பலை விட்டு இறங்கி, அந்த நீண்ட மணல் சாலையில் நடந்தார். வியாபாரிகளை சந்திப்பதற்காக சென்று கொண்டு இருந்தார்.
சிறிது நேரத்தில் சுல்தான் மாதிரி இருந்த ஒரு மனிதர் வந்து கொண்டு இருப்பதைப் பார்த்தார். அவர் தன் வீரர்களோடு வந்து கொண்டு இருந்தார். அங்கு நின்ற ஒருவரிடம் இது யார் எனக் கேட்டார். அவர், “சுல்தான்” எனக் கூறினார். சுல்தானும் தரம்பாலும் எதிரெதிரே சந்தித்த போது, சுல்தான் நீங்கள் யார்? என்பதைக் கூறுங்கள் என்றார். தரம்பால், “நான் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் காம்பாத் என்ற இடத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு வியாபாரி. இங்கு வியாபாரம் செய்ய வந்தேன்” என்றார். வியாபாரி என்பதால் அதற்குரிய மரியாதையைக் கொடுத்து தரம்பாலிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
சுல்தானோடு வந்திருந்த நூற்றுக்கணக்கான வீரர்களை தரம்பால் பார்த்தார்; ஆனால் யார் கையிலும் வாளோ, துப்பாக்கியோ இல்லை; அதற்குப் பதிலாக மிகப் பெரிய அளவிலான சல்லடைகளை (அரிப்பு) வைத்திருந்தனர். தரம்பால் மிகவும் வியப்பு அடைந்தார். ஏன் என்று அறியவும் மிகவும் ஆசைப்பட்டார். சுல்தானிடம் மிகப் பணிவாக, “உங்கள் வீரர்கள் ஏன் மிகப் பெரிய சல்லடைகளை சுமந்து கொண்டு வருகிறார்கள்?” என்றார். சுல்தான் சிரித்துக் கொண்டே,“நான் இன்று காலை இந்த கடற்கரைக்கு வந்திருந்தேன். அப்போது, என் விரலில் உள்ள மோதிரம் இங்கு எங்கேயோ விழுந்து விட்டது. அது நிச்சயம் இங்குதான் மணலுக்குள் புதைந்து இருக்கும்.
எனவே மணலை சலித்து, மோதிரத்தைக் கண்டு பிடிக்க சல்லடைகளைக் கொண்டு வந்துள்ளார்கள், என்று சுல்தான் கூறினார்.
தரம்பால், அந்த மோதிரம் மிகவும் விலை மதிப்பு வாய்ந்ததா என்று கேட்டார். சுல்தான், அதெல்லாம் ஒன்றுமில்லை; என்னிடம் இதை விட மதிப்பு வாய்ந்த மோதிரங்கள் எண்ணிக்கையிலடங்காமல் உள்ளே இருக்கின்றன. ஆனால், அந்த மோதிரம் ஒரு சந்நியாசியின் ஆசியால் எனக்குக் கிடைத்தது என்றார்.
என்னுடைய இந்த இராஜ்யம் மிக வலிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு காரணமே அந்த சந்நியாசியின் ஆசிகளே என்றார். இந்த இராஜ்யத்தை விட மதிப்பு வாய்ந்தது அந்த மோதிரம் என்றார் சுல்தான். பிறகு சுல்தான் தரம்பாலிடம் வியாபாரம் பற்றி பேச ஆரம்பித்தார்.
இப்போது நீங்கள் என்ன பொருள் கொண்டு வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். தரம்பால், ‘கிராம்புகள்’ என்றார். இதைக் கேட்டு சுல்தான் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். ‘இந்த நாடே கிராம்புகளின் நாடு; இங்கு வந்து கிராம்புகளை நீங்கள் விற்கப் போகிறீர்களா? யார் உங்களுக்கு இந்த ஆலோசனையை கூறினார்கள்? நிச்சயமாக, அவர் உங்களுக்கு ஒரு பகைவனாகத்தான் இருக்க முடியும்! இங்கு ஒரு பைசாவுக்கு நீங்கள் ஒரு கை நிறைய கிராம்புகள் வாங்க முடியும். உங்களிடம் இங்கு யார் கிராம்புகள் வாங்கப் போகிறார்கள்? நீங்கள் எப்படி இங்கு சம்பாதிக்கப் போகிறீர்கள்?’ என்றார் சுல்தான்.
நான் இங்கு ஒரு பரிசோதனை செய்யத்தான் வந்துள்ளேன். நான் இங்கு ஏதாவது இலாபம் அடைய முடியுமா? இல்லையா? என்பதை சோதிக்கத்தான் வந்திருக்கிறேன்.
என்னுடைய அப்பாவின் ஆசிகளால் இன்று வரை நான் செய்த எல்லா வியாபாரங்களிலும் எனக்கு லாபம் மட்டுமே கிடைத்தன. ஆகவே இன்று இங்கு அவரது ஆசீர்வாதம் தொடர்ந்து எனக்கு உதவி செய்கிறதா என்பதைப் பார்க்க ஆசைப்படுகிறேன் என்று தரம்பால் கூறினார்.
அப்பாவின் ஆசிகளா? இதற்கு என்ன பொருள்? என்று சுல்தான் கேட்டார். தரம்பால், ‘என் அப்பா தன் வாழ் நாள் முழுவதும் மிக நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்தார்.
அவரால் பணம் சம்பாதிக்க முடியவில்லை; அவரது மரணத் தறுவாயில்; என்னுடைய தலையில் அவரது கையை வைத்து, நீ உன் கையில் மண்ணை எடுத்தாலும் அது பொன்னாக மாறும் என ஆசி வழங்கினார். இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே தரம்பால் குனிந்து தன் கை நிறைய மண்ணை அள்ளினார். அதை சுல்தானிடம் காட்டினார். மணல், அவர் விரல்களின் ஊடாக கீழே நழுவி விழுந்தன. எல்லா மணலும் கீழே விழுந்த பிறகு வைரக்கல் பதித்த அந்த மோதிரம் தரம்பால் கையில் இருந்தது. தரம்பாலும், சுல்தானும் ஆச்சரியத்தால் கண்களை விரிவாக்கி அதைப் பார்த்தனர்.
சுல்தான், தேடிக் கொண்டிருக்கும் அதே மோதிரம் அது. தன் மோதிரத்தைப் பார்த்து சுல்தான் மன திருப்தி அடைந்தார். அவர் தரம்பாலை பார்த்து,‘இது மிக வியப்பாக இருக்கிறது! கடவுளே! உங்களுக்கு மிக்க நன்றி . அப்பாவின் ஆசிகளை உண்மையாக்கி விட்டீர்கள்! என்றார். தரம்பால், அதே கடவுள்தான், சந்நியாசியின் ஆசிகளையும் உண்மையாக்கி விட்டார். இதைக் கேட்டு சுல்தான் இன்னும் அதிகம் திருப்தி அடைந்தார்.
தரம்பாலை ஆரத்தழுவிக் கொண்டு சொன்னார்,‘ என்னுடைய அன்பு நண்பரே! நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை நான் உங்களுக்கு இன்றே தருகிறேன் என்றார்.
தரம்பால், ‘நீங்கள் 100 வருடம் வாழ்ந்து உங்கள் மக்களை நல்ல முறையில் கவனித்து வாருங்கள். உங்கள் மக்கள் அனைவரும் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். எனக்கு இதுவே போதும். வேறு எதுவும் வேண்டாம், என்றார்.
இதைக் கேட்ட சுல்தான் மிகவும் உற்சாகம் அடைந்து, ‘உங்களுடைய கிராம்புகள் அனைத்தையும் நான் எடுத்துக் கொண்டு நீங்கள் என்ன விலை கேட்கிறீர்களோ அதை தருகிறேன்’ என்றார். அப்பாவின் ஆசிகள் தரம்பாலை இங்கும் தோல்வி அடைய செய்யவில்லை.
இது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை. அதாவது நம் பெற்றோரின் ஆசிகளில் அளவிட முடியாத சக்தி இருக்கிறது. அந்த ஆசிகளை விட மிகப் பெரிய செல்வம் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு கணமும் நம் வேலையின் பலனை தருவது அந்த ஆசிகள்தான். நாம் கடவுளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை எதுவெனில், நாம் நம்முடையை மூத்தவர்களை மதித்து நடப்பதுதான்.
கருத்துகள்
கருத்துரையிடுக