ஹாரி என்பவர் ஒரு வயதான ஏழை மனிதர். சாலை ஓரமாக உட்கார்ந்து பிச்சை எடுப்பார் ஏனென்றால் இரவு முழுவதும் சாலை ஓரத்தில் தூங்க வேண்டாம் என்பதற்காக.
ஒரு நாள் காலை, வழக்கம் போல, தன்னுடைய பாயை எடுத்து அதன் மேல் பிச்சைப் பாத்திரத்தை வைத்து, பிச்சை கேட்க ஆரம்பித்தார். அவர் அமர்ந்திருக்கும் அந்த இடத்தைச் சுற்றியும்; அதனைத் தாண்டியும் நிறைய அலுவலகங்கள் இருந்தன. ஒவ்வொரு நாள் காலையும் நிறைய மனிதர்கள் இவரைத் தாண்டிச் செல்வார்கள். ஆனால், அன்று யாருமே இவர் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை.
இவர் ஏமாற்றத்திற்கு உள்ளானார். இவருடைய வாழ்க்கையையே மாற்றம் செய்யப் போகும் ஒரு சம்பவம், அன்று நடக்கப் போவதைப் பற்றி அவருக்கு சிறிது கூட தெரியவில்லை.
ஒரு இளம் பெண் அந்த தெரு வழியாக வந்தாள். ஹாரியைப் பார்த்து புன் சிரிப்போடு வாழ்த்துக் கூறினாள்; அவள் 20டாலரை அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டாள். முதல் முறையாக ஒருவர் 20 டாலரைப் பிச்சையாகப் போட்டதைப் பார்த்த ஹாரி, அதிர்ச்சி அடைந்தார். இவ்வளவு அதிகமான தொகையை இதுவரை யாரும் கொடுத்தது இல்லை. தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு, அந்த வயதான மனிதர் அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்ன? “என்று கேட்டார்.
அவள் புன்சிரிப்போடு, என் பெயர் சாரா என்றாள். அந்த வயதான மனிதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவளிடம் உற்சாகமாக, “நான் இன்று இரவு முழுவதும் தெருவில் தூங்க வேண்டியது இல்லை; உனக்கு மிகவும் நன்றி; இன்று நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்” என்று கூறியவர் மீண்டும் சாராவிடம் “எனக்கு இவ்வளவு பெரிய தொகையை ஏன் கொடுத்தாய்?” என்றார்.
சாரா மிக இனிமையாக பதில் கூறினாள். நான் நம்புகிறேன் அதாவது *நாம் எதை செய்கிறோமோ அதை இயற்கை நிச்சயமாக நமக்கு திருப்பிக் கொடுக்கும். எது நம்மைச் சுற்றிப் போகிறதோ , அது மீண்டும் நம்மைச் சுற்றி வரும்* என்றாள். அவர்கள் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள். சாரா, தனது உணவு இடை வேளை முடிந்து விட்டதால், அவருக்கு நல்லது நடக்கும் என வாழ்த்தி விட்டு, அலுவலகத்திற்கு திரும்பினாள்.
அவள் விடை பெற்று சென்றவுடனே, ஹாரி அன்று சேர்ந்த பணம் தனக்குப் போதுமானதா என சோதிக்க விரும்பினார். அவர் பணத்தை எண்ணத் தொடங்கும் போது, அந்தப் பாத்திரத்தில் ஏதோ ஒன்று மின்னுவதைப் பார்த்தார். அங்கு, ஒரு மோதிரம் இருப்பதைப் பார்த்து திகைத்தார். இது எப்படி இங்கு வந்தது! என வியந்தார்.
சாரா, நம் பாத்திரத்தில் பணம் போடும் போது, எதிர்பாராத விதமாக இந்த மோதிரம் அவள் விரலில் இருந்து நழுவி பாத்திரத்தில் விழுந்திருக்கலாம் என்று, அவருக்குத் தோன்றியது.
அவர் உடனே அவளைத் தேட ஆரம்பித்தார். அந்த தெரு முழுக்கத் தேடினார். அக்கம் பக்கத்தில் இருந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரித்தார். ஆனால் அவரால் எங்குமே அவளைக் காண முடியவில்லை. அந்த வயதான மனிதர் அலைந்து திரிந்து தேடியதால், களைப்பு அடைந்தார்.
திடீரென்று, ஹாரியின் மனதில் ஒரு பேராசை தோன்றியது. இந்த மோதிரத்தை விற்று, அதன் மூலம் வரும் பணத்தால் நாம் சில மாதங்களாவது தெருவில் தூங்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்தார்.
எனவே, அவர் ஒரு நகைக் கடைக்கு சென்று, அந்த மோதிரத்திற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கேட்டார்.
4000 டாலர்கள் கிடைக்கும் என்று கடை உரிமையாளர் கூறினார். அதை கேட்ட அவருக்கு தன் காதுகளையை நம்ப முடியவில்லை! எவ்வளவு பெரிய தொகை இது என ஆச்சரியப்பட்டார்.
இந்தப் பணத்தை எடுத்துக் கொண்டுபோய், கொஞ்ச காலமாவது ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்தலாம் என்ற ஆவல் அவரைத் தூண்டியது. இந்தப் பணத்தை வைத்து நான் நிறைய வசதிகளோடு வாழலாம்; இரவில் குளிரில் வீதியில் தூங்க வேண்டியதில்லை;
வீட்டில் நிம்மதியாக கதகதப்பான வெப்பத்தில் உறங்கலாம். திடீரென்று சாராவின் அந்த வாக்கியங்கள் அவர் காதில் ஒலித்தன. “நாம் என்ன செய்கிறோமோ அதை இயற்கை நமக்குத் திருப்பிக் கொடுக்கும்” இது அந்த வயதான மனிதருக்கு எதிர்பாராத பேரதிர்ச்சியைக் கொடுத்தது; அந்த வாக்கியங்கள் அவரைக் கனவுலகில் இருந்து, நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்தது; அவரது தவறை உணரச் செய்தது; அந்த மோதிரத்தை விற்கக் கூடாது என தீர்மானித்து, கடையை விட்டு வெளியேறினார். மறுபடியும் சாராவை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அருகில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் சென்றார். அதன் பிறகு, பின்னால் இருக்கும் தெருவில் உள்ள அலுவலகத்தில் சாரா வேலை பார்ப்பதாகக் கூறியது அவரது ஞாபகத்திற்கு வந்தது.
உடனே, அந்த தெருவிற்கு சென்றார். அங்குள்ள ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று சாராவைப் பற்றி விசாரித்தார். கடைசியாக அவர் சென்ற அலுவலகத்தில், சாரா வேலை பார்க்கிறாள் என்பதைக் கண்டு பிடித்தார். அவளைச் சென்று பார்த்தார்.
சாரா இவரைப் பார்த்ததும், வியப்பும், குழப்பமும் அடைந்தாள். நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? எனக் கேட்டாள். உடனே ஹாரி அந்த மோதிரத்தை எடுத்து, “இது உங்களுடைய மோதிரம் என்று நான் நம்புகிறேன்; நீங்கள் பணத்தைப் போடும் போது இந்த மோதிரம் என் பாத்திரத்தில் நழுவி விழுந்திருக்கும் என நான் நினைக்கிறேன்” என்றார்.
அந்த மோதிரத்தை பார்த்தவுடன், சாரா அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவள், முழுமையான, இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்தாள்.
“நீங்கள் இந்த மோதிரத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தமைக்கு, நான் உங்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன். இது எவ்வளவு மதிப்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியாது என்று கண்ணீர் மல்க கூறினாள். அவரிடம் வேறு ஏதும் கேட்காமல், மிக ஆவலோடு, நீங்கள் விரும்பியிருந்தால், இந்த மோதிரத்தை விற்று நிறைய பணம் பெற்றிருக்கலாம். இதை ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள்?” என்றாள்.
அதற்கு ஹாரி, நீ எனக்கு மனிதாபிமானத்தோடு செய்த உதவிக்கு முன், நான் இதைத் திருப்பிக் கொடுத்தது மிகவும் சிறியதுதான். இதைத் தவிர, ஒரு முறை அறிவான பெண்மணி ஒருத்தி என்னிடம் “நாம் என்ன செய்கிறோமோ அதை உறுதியாக இயற்கை நமக்குத் திருப்பிக் கொடுக்கும்” என்றார்.
அந்த வயதான மனிதரிடம் இருந்து இதைக் கேட்டவுடன், சாரவின் இதயம் அதிர்வு அடைந்தது. மீண்டும் அவருக்கு தன் இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றிகளை அர்ப்பணித்து விட்டு, அந்த மோதிரம் அவளது திருமண மோதிரம் என்றும், நான் ஒரு போதும் நீங்கள் செய்த இந்த அன்பான செயலை மறக்கவே மாட்டேன் என்றாள்.
ஹாரி மோதிரத்தை அவளிடம் கொடுத்து விட்டு திரும்பினார். அவர் சென்ற பிறகு, சாராவுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள், அவளுக்கு சிறந்த ஆலோசனையைக் கூறினார்கள். “கோ ஃபண்ட் மீ” என்ற ஒரு வெப்சைட் மூலம் நீங்கள் இந்த மனிதருக்கு உதவலாம்; நீங்கள் அதில் உங்களது இந்த கதையைப் பகிர்ந்து, இந்த மனிதருக்கு நன்கொடை கொடுக்கும்படி மக்களிடம் கேட்கலாம் என்றனர். சாரா உற்சாகத்தோடு, நான் நிச்சயமாக இதைச் செய்வேன். இந்தக் கதையைக் கேட்டு மக்கள் நிச்சயமாக மகிழ்ந்து, நன்கொடை கொடுப்பார்கள்.
சாரா, ஹாரிக்காக வெப் சைட்டில் ஒரு கூட்டு நலத் திட்ட பக்கத்தை ஆரம்பித்தாள்.
அது வைரலாகப் பரவியது; மோதிரம் காணாமல் போனதும், ஹாரி அதைத் திருப்பிக் கொடுத்த கதையும் அத்துடன் பரவியது. தயாள குணத்தோடு மக்கள் நன் கொடையை வழங்க ஆரம்பித்தார்கள்.
சில நாட்களிலேயே, 1,90,000 டாலர்கள் நன்கொடையாகச் சேர்ந்தது. அந்த தொகையை ஹாரியிடம் ஒப்படைப்பதற்காக சாரா சென்றாள்.
முதன் முதலாக அவரை சந்தித்த இடத்தில் அவரைப் பார்த்து, அந்தப் பணப்பையை அவரது கையில் கொடுத்தாள்.
அந்தப் பையில் தனக்கு உதவி செய்யும் பொருட்டு ஏதோ சில பொருட்களை சாரா வாங்கி வந்திருப்பாள், அதற்கு நான் அவளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என ஹாரி நினைத்தார். அந்தப் பையை திறந்து பார்த்தார். அதில் இருந்த பணத்தைப் பார்த்து பேச்சு இழந்து விட்டார். சாராவிடம், “ஏன் எனக்கு இவ்வளவு அதிகமான பணத்தைக் கொடுக்கிறாய்?” என்று கேட்டார்.
ஒரு திருப்தியான புன் சிரிப்பு மலர்ந்த முகத்தோடு, சாரா,“இது உங்களுக்கு, உங்கள் நேர்மைக்கு கிடைத்த வெகுமதி. நீங்கள்தான் இதை சம்பாதித்து இருக்கிறீர்கள்” என்றாள்.
அவரிடம் உற்சாகத்தோடு, எப்படி மக்கள் அவர் நேர்மையை, பரிவை விரும்பினார்கள் என்பதையும், பணத்தை அந்த வெப் சைட் மூலமாக, நன் கொடையாக அனுப்பியதையும் விவரித்துக் கூறினாள். இனிமேல் உங்கள் இரவுகளை தெருவில் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இந்தப் பணத்தில் ஒரு சொந்த வீடு, வாங்கலாம் என்றாள். இதைக் கேட்ட ஹாரி மகிழ்ச்சியால் மூழ்கடிக்கப்பட்டு, கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, சாராவுக்கு ஆசிகள் வழங்கினார்.
அவரைப் போலவே சாராவும் ஆனந்தத்தில் மூழ்கினாள்; மகிழ்ச்சியால் அவள் இதயம் நெகிழ்ந்தது; கண்ணீர் மல்கிய கண்களோடு அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு திரும்பினாள்.
அவள் சென்ற பிறகு, அந்தப் பையில் ஒரு சிறிய காகிதம் இருப்பதை ஹாரி பார்த்தார்.
அதில், *" இயற்கை நமக்கு எப்போதுமே கொடுக்கும், நாம் செய்ததை".* என்ற வாசகம் இருந்தது. ஏதோ ஒரு வகையில் நமது செயல்கள் நம்மிடமே திரும்பி வருகின்றன.
*உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக