மகாபாரதம் இதிகாசங்களுள் ஒன்று. இந்தக் கதை, மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களான கவுரவர்கள், பாண்டவர்கள் பற்றியது. இவர்கள் அனைவரும் தங்களுடைய கல்வி அறிவை வளர்ப்பதற்காக குரு குலம் சென்றனர். அந்தக் காலத்தில், இப்போது இருப்பது போல் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் கிடையாது. நமக்குப் பாடம் கற்றுத் தரும், அதாவது பாடம் மட்டுமல்ல; அவருக்குத் தெரிந்த அனைத்தையும் கற்றுத் தரும் குரு இடத்திற்கு நாம் சென்று, அங்கு தங்கி இருந்து, அவருக்குப் பணிவிடைகள் செய்து அனைத்தையும் கற்க வேண்டும். இதற்கு *“குரு குலக் கல்வி முறை”* என்று பெயர்.
மாணவர்கள் அனைவரும் ஒருவரை விட மற்றொருவர் நன்கு படித்து, முன்னேற வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் சூழ்நிலை அந்த குருகுலத்தில் இருந்தது. ஒவ்வொருவரும் அனைத்துப் பாடங்களிலும் மிகச் சிறந்தவர்களாக வரவேண்டும் என்று விரும்பினர். அவர்களது குரு துரோணாச்சாரியார் தங்களைப் புகழ வேண்டும்; அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என விரும்பினர். அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு, நன்கு படித்தனர். குருவும் தனது மாணவர்கள் பற்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
கோடை காலத்தில் ஒரு நாள், சில வேலைகளுக்காக பக்கத்தில் இருக்கும் ஊருக்கு குரு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் திரும்பி வர ஒரு வாரம் ஆகும். குரு மாணவர்கள் அனைவரிடமும் தான் ஊருக்குப் போவதைப் பற்றிக் கூறினார். நான் இல்லாத இந்த ஒரு வாரத்தில் நீங்கள் கொஞ்சம் பாடங்களைப் படிக்க வேண்டும் என்றார்.
அடுத்த வாரம் வேகமாகச் சென்றது. குரு, குரு குலத்திற்குத் திரும்பினார். தன் மாணவர்கள் அனைவரையும் அழைத்தார். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு வந்தனர். குரு அவர்களைப் பார்த்து நான் இல்லாத இந்த ஒரு வாரத்தில், நீங்கள் என்ன படித்தீர்கள் என்று கேட்டார்.
ஒவ்வொருவராக முன் வந்து, தாங்கள் படித்ததைப் பற்றிக் கூறினார்கள். ஒரு மாணவன்- மூன்று பாடங்கள், அடுத்தவன் – நான்கு, சில பேர் - ஐந்து என சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்கள் படித்த பாடங்களைப் பற்றி, குருவும் எழுதிக் கொண்டே வந்தார். கடைசியாக தர்மர் வந்தார். குரு அவரை ஆவலோடு பார்த்தார். மாணவர்களில் மிகவும் நல்ல மாணவர் தர்மர். எனவே, குரு அவரிடம் நிறைய எதிர்பார்த்தார்.
தர்மரால் மற்ற மாணவர்களைப் போல் நம்பிக்கையோடும், குரலை உயர்த்திக் கொண்டும் பேச முடியவில்லை. எதுவும் பேசமுடியாமல் கஷ்டப்பட்டார்.
“தர்மா, நீ என்ன படித்தாய்? என்பதைக் கூறு என்று அவரை குரு தைரியப்படுத்தினார். நான் இல்லாத போது நீ என்ன செய்தாய் ?நீ எல்லா பாடங்களையும் படித்து முடித்திருப்பாய்; மற்றும் வேறு வேலைகளையும் மிகுதியாக செய்து இருப்பாய் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் குரு.
தர்மர் மிகவும் தாழ்ந்த குரலில், “நான் படித்துப் புரிந்து கொண்டது ஒரே ஒரு வாக்கியம்தான் குரு” என்றார்.
துரோணாச்சாரியார் அதிர்ச்சி அடைந்தார். தர்மரது பதிலை அவரால் நம்ப முடியவில்லை. “ஒரே ஒரு வாக்கியமா ?” என்று கேட்டார்.
இந்த குறுகிய காலத்தில் என்னால், ஒரே ஒரு வாக்கியம்தான் படிக்க முடிந்தது என தர்மர் மிக அமைதியாகக் கூறினார்.
குருவுக்குக் குழப்பமாக இருந்தது. தர்மருக்கு என்னவாயிற்று? இந்த வாரம் முழுவதுமாக ஒரே ஒரு வாக்கியத்தைப் படித்தேன் என்கிறானே! மற்ற அனைவரையும் விட வயதில் மூத்தவர்; கஷ்டப்பட்டு எதையும் செய்பவர்; அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாகத் திகழும் படி தர்மர் இருப்பார் என்றெல்லாம் குரு நினைத்தார். ஆனால், சிறிது கூட வெட்கம் இல்லாமல், ஒரு வாக்கியத்தைப் படித்தேன் என்கிறார். தர்மரின் இந்த செயல் குருவுக்கு புதிராக இருந்தது.
குரு தன் மாணவர்களைத் திட்ட மாட்டார். காரணம் இன்றி எதையும் செய்ய மாட்டார். மாணவர்களும் தங்கள் குரு நாதரை மிகவும் நேசித்தனர்.
எப்போதும் அவருக்குக் கீழ்ப்படிதலுடன் பணிவாகவும் நடந்தனர். இப்போது அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றனர். குருநாதர் தர்மரிடம் மிகவும் கோபப்படுவார் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தனர்; அவரது சோம்பேறித்தனத்திற்காக தர்மரைத் திட்டுவார் என்றும் எதிர்பார்த்தனர். தர்மரை தண்டிப்பாரா? எவ்விதமாக தண்டிப்பார்? அவரை என்ன செய்ய சொல்வார்? மன்னித்து விடுவாரா? இவ்வாறு தங்களுக்குள் மென்மையான குரலில் பேசிக் கொண்டார்கள்.
இதுதான் முதல் முறையாக தர்மர், தன் குரு நாதர் கொடுத்த பணியை செய்யாமல் இருந்தது. குரு நாதர் தர்மரைக் கோபமாகப் பார்த்து,“உனக்கு வெட்கமாக இல்லையா? என கத்தினார். இங்குள்ள அனைவரும் உன்னை விட வயதில் சிறியவர்கள். அவர்கள் அனைவரும் நான் கொடுத்த வேலையை, கஷ்டப்பட்டு முடித்து விட்டனர். ஆனால் நீ” என பாதியும் நிறுத்தி விட்டு, முகத்தைத் துடைத்தார். அவரது முகம் கோபத்தால் சிவந்தது. தாங்க முடியாத கோபத்தால் உடல் நடுங்க ஆரம்பித்தது.
குரு நாதரின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்த சமயத்திலும், தர்மரது முகம் எந்தவித சலனமும் இன்றி பேரமைதியுடன் இருந்தது. “குருவே, என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. இது ஒன்றைத்தான் என்னால் செய்ய முடிந்தது” என்றார். குரு நாதர் தன் பொறுமையை இழந்தார்.
இன்னும் தர்மர் அமைதியாக இருந்தார். குருவே உங்களை ஏமாற்றம் அடையச் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றார். இதை மட்டும்தான் என்னால் படிக்க முடிந்தது என்றார். மற்ற மாணவர்கள் அனைவரும் மிகவும் வருத்தம் அடைந்தார்கள்.
தனக்கு குருநாதர் கொடுத்த வேலையையும் செய்யாமல், குருவிடம் வாதம் வேறு செய்கிறாரே, என நினைத்தனர். தர்மர் கஷ்டத்திற்கு உள்ளாகப் போகிறார், என தங்கள் முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டினார்கள்.
குருவால் தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. கோபத்தோடு தர்மரைப் பார்த்து, “ உன்னுடைய கீழ்ப்படியாமைக்காக நான் உன்னை தண்டிக்கப் போகிறேன். நீ சோம்பேறி மட்டுமல்ல, கொடூரமாகவும், மிகவும் பிடிவாதக் காரனாகவும் இருக்கிறாய்.“ என்றார். திரும்பவும், தர்மர் மிக தாழ்ந்த குரலில் அமைதியாகவும், அன்பாகவும் ,“ உங்களை ஏமாற்றம் அடையச் செய்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இந்த ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும்தான் என்னால் படிக்க முடிந்தது” என்றார்.
வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் திகைப்பு அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் தர்மரையும் விரும்புவர்; குரு நாதரையும் விரும்புவர். ஏன் தர்மர் குருநாதரிடம் மன்னிப்பு கேட்காமல் இருக்கிறார். மன்னிப்புக் கேட்டால், குரு நாதர் மன்னித்து விடுவார். தர்மர், குருநாதர் கொடுத்த வேலையை இப்போது செய்து விடலாம். அதற்கு நாம் அனைவரும் தர்மருக்கு உதவி செய்திடலாம். எல்லோரும் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணினர்.
குரு நாதரால் தர்மர் மிகவும் மோசமாகத் திட்டப்பட்டார். குரு தர்மரை திட்ட, திட்ட அவர் அமைதியாகவே இருந்தார். தான் கூறிய அதே பதிலை மீண்டும் அமைதியாக கூறினார்.
ஏதோ தவறு நடந்து இருக்கிறது என திடீரென்று குரு நாதர் உணர்ந்தார். வழக்கத்தை விட ஏதோ ஒன்று தர்மர் செய்து இருக்கிறார். நான் இவ்வளவு தூரம் கடுமையாக நடந்த பிறகும் தர்மரால் எப்படி இவ்வளவு தூரம் அமைதியாக இருக்க முடிகிறது?
“அப்படி என்னதான், நீ படித்தாய். அந்த வாக்கியத்தைக் கூறு” என்றார்.
தர்மர், புத்தகத்தை எடுத்து வந்து அந்த வாக்கியத்தைக் காட்டினார்; ‘கோபத்தைக் கட்டுப்படுத்து’ என்று புத்தகத்தில் இருந்தது.
அந்த புத்தகத்தில் தர்மர் காட்டிய அந்த ஒரே வாக்கியத்தைப் பார்த்தவுடன் குருவும், மாணவர்களும் தர்மரை மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டனர். அந்த வாக்கியத்தை தர்மர் படிக்க மட்டும் செய்யவில்லை. அதன்படி நடக்கவும் பயிற்சி செய்திருக்கிறார். அவரது கோபத்தை அமைதிக்குக் கொண்டு வர அவருக்கு ஏழு நாட்கள் தேவைப்பட்டு இருக்கிறது.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக -- என்ற வள்ளுவர் வாக்கும்,
இந்த கதைக்குப் பொருந்துகிறது.
குரு துரோணாச்சாரியாரின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. எவ்வளவு சிறந்த அறிவாளி தர்மர் என்பதை உணர்ந்தார். அவரை ஆரத்தழுவி, ‘என் மகனே! என்னை மன்னித்து விடு. இன்று நீ எனக்குப் பாடம் கற்றுத் தந்து விட்டாய். உன்னைப் போல் ஒவ்வொருவரும் இருந்து விட்டால், இந்த உலகமே சொர்க்க பூமியாக மாறி விடும்.‘ என்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக