ஒரு காலத்தில், ஒரு மனிதனுக்கு தீவிர விருப்பம் ஒன்று இருந்தது. அது என்னவெனில், வாழ்க்கையின் மிக உண்மையான பொருளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. அதைத் தேடி கண்டு பிடிப்பதற்காக அவன் வெளியே கிளம்பினான். ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடம் என அவன் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள், அவன் ஒரு மனிதனை சந்தித்தான். அந்த மனிதன் இவனுக்கு அறிவுரை வழங்கினான்; இந்த கிராமத்தில் முடிவில் ஒரு குகை இருக்கிறது; அங்கு சென்றால், உன் கேள்விக்கு விடை கிடைக்கும்.
அவன் சொல்லியபடியே, இந்த மனிதன் அந்த குகைக்குச் சென்றான்; அங்கு ஒரு சந்நியாசியை சந்தித்தான்; அந்த சந்நியாசி இவனிடம் ஒரு கிராமத்தைப் பற்றிக் கூறினான்; அந்த கிராமத்தில் ஒரு நாற்சந்தி இருக்கும்; அங்கு போனால், உனக்கு என்ன வேண்டுமோ அதை நீ காணலாம், என்றார்.
மிகுந்த உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும், அந்த மனிதன் அந்த கிராமத்தைத் தேடி வெளியே கிளம்பினான். பல வாரங்கள் தேடிய பிறகு அந்த கிராமத்தைக் கண்டு பிடித்தான்; முடிவாக அந்த நாற்சந்தியை அடைந்தான்.
அங்கு மூன்று கடைகளை அவன் பார்த்தான். கடைகளுக்கு மிக அருகில் சென்றான். ஒரு கடையில் மரத்துண்டுகள் விற்கப்படுவதைப் பார்த்தான்; இரண்டாவது கடையில் உலோகத்துண்டுகள் மற்றும் மூன்றாவது கடையில் மெல்லிய உலோகக் கம்பிகள் விற்கப்படுவதைக் கண்டான்.
அந்த மனிதன் வெகு நேரமாக அந்தக் கடைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் எந்த உண்மையைத் தேடி வெளியே வந்தானோ, அதற்கும் இந்த கடைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் கண்டான். மிக அதிக அளவில் யோசித்துப் பார்த்தும், அதில் இருந்து அவனால் எதையும் உணரமுடியவில்லை.
ஏமாற்றம் அடைந்த நிலையில், அவன் அந்த சந்நியாசியிடம் திரும்பிச் சென்று, அவரிடம் அந்த கடைகளைப் பற்றிக் கூறினான். அந்த சந்நியாசி அவனைப் பார்த்து, “காலம் வரும் போது, நீ அனைத்தையும் புரிந்து கொள்வாய்“ என்று பதில் கூறினார்.
அந்த மனிதன் விளக்கமாகக் கூறும்படி வேண்டினான்; ஆனால், சந்நியாசி எந்த பதிலும் கூறவில்லை. அந்த மனிதன் விரக்தியோடு திரும்பினான். இங்கு வந்ததே பெரிய முட்டாள்தனம் என்று நினைத்தான். ஆனால், அங்கிருந்து வெளியேறிய பிறகும் கூட, அவன் அந்த உண்மையைத் தேடுவதை தொடர்ந்தான்.
காலம் கடந்து செல்லச் செல்ல, உண்மையைத் தேடும் இந்த அனுபவம் குறித்த விஷயங்கள் மங்கத் தொடங்கின . ஒரு நாள் இரவு, அவன் வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, அவன் இனிமையான இசை ஒன்றை கேட்டான்; அது அவனது கவனத்தை ஈர்த்தது; அந்த வசீகரமான இசை, அவனிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது; அதை நோக்கி கவரப்பட்டான்.
அவன் அந்த இசையைத் தொடர்ந்து சென்றான். அந்த இசை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்த போது, ஒரு இசைக் கலைஞனின் விரல்கள் சித்தார்க் கம்பிகளில் அசைந்து நடனமாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். திடீரென்று, எதையோ கண்டுபிடித்ததைப் போல மகிழ்ச்சியில் திளைத்தான்; மேலும் அவன் கண்கள் கண்ணீரால் நிறைந்தன!
மெல்லிய உலோகக் கம்பிகள், உலோகத்துண்டுகள், மரம் இவற்றால் ஆன அந்த சித்தாரைப் பார்த்ததும், அவனுக்கு அந்த கிராமத்து நாற்சந்தியில் இருந்த அந்த மூன்று கடைகள் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அதன் முக்கியத்துவத்தை அவனால் உணர முடியவில்லை; ஆனால், இப்போது அதைப் பற்றிய மெய்யுணர்தல் அவனுள் எழுந்தது. அவனது இதயம் உருகத் தொடங்கியது; அவன் முழுவதுமாக அன்பால் நிரப்பப்பட்டான்; அவனால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அந்த நாளில் வாழ்வின் உண்மையான பொருளை அவன் புரிந்து கொண்டான். அந்த சந்நியாசியின் செய்தியின் பொருளையும் புரிந்து கொண்டான்.
நம்மிடம் அனைத்துமே நம்முள் ஏற்கனவே இருக்கின்றன. சரியான வழியில் அவற்றை தகவமைத்துக் கொண்டும், ஒருங்கிணைத்துக் கொண்டும் செல்வதுதான் நமக்குத் தேவைப் படுகிறது.
நாம் வாழ்க்கையின் பொருளை தேடிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், உடைந்து சிதறிய பகுதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; எனவேதான், வாழ்க்கையின் உண்மையான பொருளை நம்மால் உணர முடியவில்லை. எப்போது நமது மனம், உடல், மற்றும் இதயம் ஒன்று சேரும் இந்த கணத்தில், அந்தக் கணமே உண்மையில் ஒரு இனிமையான இசையாக மாறுகிறது; அதன் பிறகு வாழ்க்கையின் உண்மையான பொருளை நாம் உணரத் தொடங்குகிறோம்!
*
கருத்துகள்
கருத்துரையிடுக