ஐன்ஸ்டீனின் "சார்பியல் கோட்பாடு" மிகவும் புகழ் வாய்ந்தது. அப்போது, இந்த கோட்பாட்டைப் பற்றி விளக்கம் தருவதற்காக, அவரை ஒவ்வொரு இடமாக வருவதற்கு அழைப்பு விடுத்தனர். வழக்கமாக, ஐன்ஸ்டீன் காரில்தான் செல்வார். அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவரது டிரைவரும் கூடவே செல்வார். ஐன்ஸ்டீனின் விளக்கக் கூட்டங்கள் நடக்கும் போது, டிரைவர் கடைசி வரிசையில், வழக்கமாக உட்கார்ந்து இருப்பார்.
ஒரு விளக்கக் கூட்டத்திற்காக ஒரு நாள் காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, அவரது டிரைவர், “சார், உங்களுடைய ‘சார்பியல் கோட்பாடு’ மிகவும் எளிமையானது. அதற்கு நான் கூட விளக்கம் கொடுக்க முடியும். நான் இதை நிறைய தடவைகள் கேட்டு இருக்கின்றேன். நீங்கள் உங்கள் கோட்பாட்டை விளக்கும் போது, கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.
இதைக் கேட்டவுடன் மனக்குழப்பம் அடைவதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீன் அதை தனக்குக் கிடைத்த ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டார். அறிவியலைப் பற்றி ஏதும் தெரியாமல் இருந்தாலும், தனது டிரைவர் கூட தன்னுடைய கோட்பாட்டை புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைந்தார்.
தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையாத அந்த கால கட்டத்தில், ஐன்ஸ்டீன் எப்படி இருப்பார் என்பது மக்களுக்கு உண்மையிலேயே தெரியாது.
“எனது அடுத்த விளக்கக் கூட்டத்தில் நீதான் கோட்பாட்டை விளக்க வேண்டும்” என்று ஐன்ஸ்டீன் கூறிய போது, டிரைவரும் அதற்கு சம்மதித்தார்.
விளக்கக் கூட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தவுடன், அவர்கள் இருவரும் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர். டிரைவர் ஒரு விஞ்ஞானி போல, உடை உடுத்திக் கொண்டார். ஐன்ஸ்டீன் தன்னைத் தானே ஒரு டிரைவர் போல் மாற்றிக் கொண்டு ஹால் உள்ளே சென்றனர்.
இறுதியாக, அவரது டிரைவர் மேடைக்குச் சென்று, “சார்பியல் கோட்பாடு “ பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். யாருமே அவரை சந்தேகம் கொள்ள இயலாத அளவில், விளக்கக் கூட்டம் நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.
விளக்கம் முடிந்த பிறகு, கேள்வி பதில் சுற்று, வந்தது. கேள்விகளில் நிறைய கேள்விகள் ஏற்கனவே நடந்த கூட்டங்களில் கேட்கப்பட்டவை. எனவே எல்லா கேள்விகளுக்கும் உரிய பதில்களை டிரைவர் மிகவும் இலகுவாகக் கூறி விட்டார்.
கேள்வி பதில் சுற்று அனேகமாக முடியும் தருணத்தில், பார்வையாளர்களில் ஒருவர் கடைசிக் கேள்வியைக் கேட்டார். இந்த கேள்வி இதுவரை நடந்த விளக்கக் கூட்டங்களில் கேட்கப்படாத கேள்வியாக இருந்ததால், டிரைவருக்கு பதில் கூற இயலவில்லை.
இந்த கேள்விக்கு தவறாக பதில் கொடுத்தால், அவரது எஜமானர் கற்றறிந்த அறிஞர்கள் முன்னிலையில் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பது டிரைவருக்குத் தெரியும். நான் ஐன்ஸ்டீன் அல்ல; நான் ஒரு சாதாரண டிரைவர் என்று கூறினால், மிகப் பெரிய மகான்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆகவே, டிரைவர் ஒரு கணம் தனக்குள் ஸ்திரப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு,“ உங்களுடைய கேள்வி, மிகச் சாதாரணமானது. இதற்கு என் டிரைவர் கூட விடை தருவார்” என்று பதில் கூறினார். அவர் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவரிடம் சென்று இந்தக் கேள்விக்குரிய பதிலைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
தன் டிரைவரின் இந்த பதிலைக் கேட்டு ஐன்ஸ்டீன் ஆச்சரியம் அடைந்தார். ஆனால், உள்ளுக்குள் முழுவதுமாக மகிழ்ச்சி அடைந்தார். அந்த கேள்விக்கு விடை கூறினார். எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல், விளக்கக் கூட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த உண்மையான சம்பவம் நமக்கு போதிப்பது என்னவெனில், “ஆழ்ந்த அமைதியும் மேலும் விழிப்புணர்வும் மனதில் இருக்கும் போது, இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து, நாம் வெளியே வந்து விடலாம் “ .
கருத்துகள்
கருத்துரையிடுக