ஒரு முறை அரசர் ஒருவர் வேட்டையாட சென்றார்; அதில் மிகவும் மூழ்கியதால், காட்டில் வெகு தூரம் வரைக்கும் சென்று விட்டார். அவருக்கு மிகவும் தாகம் எடுத்தது. தண்ணீரைத் தேடிப்பார்க்கும் போது, ஒரு மரம் வெட்டுபவரை சந்திக்க நேர்ந்தது. அவர் மரத்தில் இருந்து கரி தயார் செய்து கொண்டிருந்தார். அரசர், அவரிடம் சென்று தண்ணீர் கேட்டார். அவரிடம் ஒரே ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் இருந்தது என்றாலும், அதை மகிழ்ச்சியோடு அரசருக்குக் கொடுத்தார்.
அரசர் மரம் வெட்டுபவரின் மீது முழுவதுமாக திருப்தி அடைந்தார். ஏனென்றால், அரசர் தாகத்தால் மிகவும் தவித்த நேரத்தில் தண்ணீர் கொடுத்து உதவினார் அந்த மரம் வெட்டுபவர். அரசர் அவரிடம்,“ ஓ இரக்கமான மனிதரே! நீங்கள் என் அரண்மனைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு நான் ஒரு வெகுமதி கொடுப்பேன்” என்றார். அந்த மரம் வெட்டுபவரும் அரசரின் அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
இந்த சம்பவம் நடந்த சில காலத்திற்கு பிறகு, அந்த மரம் வெட்டுபவர் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்றார். தன்னைத்தானே அரசரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டார். “நீங்கள் காட்டில் தாகத்துக்காக தண்ணீர் தேடும் போது, உங்களுக்கு தண்ணீர் கொடுத்த அந்த மரம் வெட்டுபவர் நானே!” என்றார்.
அரசர், மிகுந்த உற்சாகத்தோடு அவரை உபசரித்தார். “இந்த ஏழை மனிதருக்கு, நான் என்ன செய்து உதவலாம்?” என எண்ணத் தொடங்கினார். மிகவும் யோசித்த பிறகு, முடிவில் அரசர் ஒரு சந்தன மரத் தோட்டத்தை மரம் வெட்டுபவருக்குக் கொடுத்தார்.
அந்த மரம் வெட்டுபவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதன் மூலம், தனக்கு போதுமான வருவாய் கிடைக்கும். தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதும் எளிதாக இருக்கும் என மகிழ்ச்சி அடைந்தார்.
இவ்வாறாக, அந்த மரம் வெட்டுபவர் இதிலிருந்து அதிகப் பணம், சம்பாதிக்க ஆரம்பித்தார்.
ஒரு நாள் அரசர், மரம் வெட்டுபவரை சந்தித்து, அவரது நிலைமை எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க நினைத்தார்; சந்தன மரத் தோட்டத்திற்கு ஒரு உல்லாசப் பயணம் போனது போலவும் இருக்கும். இந்த கருத்துடன், அரசர் சந்தன மரத் தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டார்.
ஒரு குறிப்பிட்டத் தூரத்தில் இருந்தே, தோட்டத்தில் இருந்து புகை கிளம்பி வருவதை அரசர் பார்த்தார். மிக அருகில் வந்ததும், சந்தன கட்டைகள் எரிந்து கொண்டிருப்பதையும், அந்த மரம் வெட்டுபவர் அதற்குப் பக்கத்தில் நிற்பதையும் அரசர் பார்த்தார்.
அரசர், தன்னை நோக்கி வருவதைப் பார்த்த அந்த மரம் வெட்டுபவர் அரசரை வரவேற்க தயார் ஆனார். அந்த இடத்தை அடைந்தவுடனேயே, அரசர் அவரிடம்,“ஓ, நல்ல மனிதரே! நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் !? “என்று கேட்டார்.
அந்த மரம் வெட்டுபவர் அரசரிடம், “உங்களுடைய நல்லாசியால், நான் மிகவும் வசதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இந்த தோட்டத்தை எனக்குக் கொடுத்து, நீங்கள் மிகப் பெரிய நன்மையை எனக்கு செய்து இருக்கிறீர்கள். இந்த தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கரி தயாரித்து, அதை விற்றுக் கொண்டு இருக்கின்றேன். இப்போது சிறிதளவில்தான் மரங்கள் இருக்கின்றன. உங்கள் ஆசியால், எனக்கு இன்னொரு தோட்டம் கிடைத்தால், என்னுடைய மீதி வாழ்நாளையும் வசதியாகக் கழித்து விடுவேன் “என்றார்.
குறுகிய காலத்திற்கு உள்ளாகவே அந்த அழகான சந்தன மரத்தோட்டம், ஒரு பாலை வனமாக தோற்றம் அளித்ததை அரசர் பார்த்தார். எங்கு பார்த்தாலும், கரிக்குவியல்களாக இருந்தன. இப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மரங்கள் தோட்டத்தில் இருந்தன. அவைதான், இந்த மரம் வெட்டுபவருக்கு நிழல் தரும் நோக்கத்தோடு இருந்தன.
அரசர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்; ஆனால், அந்த மரம் வெட்டுபவரிடம், “பரவாயில்லை, நான் இங்கே காத்திருக்கிறேன். மார்க்கெட்டுக்கு சென்று இந்த மரங்களை விற்று வா; கரியை அல்ல “ என்றார். அந்த மரம் வெட்டுபவர் இரண்டு மீட்டர் அளவுக்கான மரத்துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்கு சென்றார்.
நல்ல தரமான இந்த சந்தனக் கட்டைகளைப் பார்த்து மக்கள் பிரமிப்பு அடைந்தார்கள்; முடிவாக மரம் வெட்டுபவர் அந்த சந்தனக் கட்டைகளை விற்று 300 ரூபாய் கிடைக்கப் பெற்றார். அவர் வழக்கமாக கரிகளை விற்றுக் கிடைக்கும் தொகையை விட இது எத்தனையோ மடங்கு மேலானது.
மரம் வெட்டுபவர் அரசரிடம் வந்தவுடன் மிகவும் மனம் உடைந்து அழுதார்; தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக் கொண்டார். தன்னுடைய அறியாமையால், விலை மதிப்பற்ற பொருளை இழந்து விட்டதற்காக ஆழ்ந்த வருத்தம் அடைந்தார். அரசர் அவரை அமைதிப்படுத்தி, இனிமேல் புதிதாக தொடங்குங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.
இந்தக் கதையில், சந்தன மரத்தோட்டம் நம் உடலைக் குறிக்கிறது; சந்தன மரம் நம்முடைய ஒவ்வொரு மூச்சையும் குறிக்கிறது. நம்முடைய வாழ்க்கை சந்தனக் கட்டை போல மணம் வீசுகிறதா? அல்லது நாமும் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், வெறுப்பு, தீமை மற்றும் பற்றுகள் போன்ற நெருப்பால் எரித்துக் கொண்டு இருக்கின்றோமா? அந்த மரம் வெட்டுபவர் தன்னுடைய அறியாமையால் சந்தனக் கட்டைகளை எரித்து கரியாக்கியதைப் போல, நாமும் செய்கிறோமா?
கருத்துகள்
கருத்துரையிடுக