ஒரு வசந்த காலத்தில், காட்டின் நடுவில் இருந்த ஒரு ரோஜா செடி தன்னுடைய அழகான மலர்களின் பெருமையை பெரிதாக கூறிக் கொண்டு நின்றது. அதன் அருகில் நின்ற சில பைன் மரங்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தன. ஒரு பைன் மரம் ரோஜாவைப் பார்த்துக் கொண்டு,“ ரோஜா செடியில் எவ்வளவு அழகான மலர்கள் இருக்கின்றன. நான் வருத்தம் அடைகிறேன். நான் அதைப் போல அழகாக இல்லை” என்று கூறியது.
“நண்பனே, வருத்தப்படுவதற்கு இங்கே ஏதுமே இல்லை. எல்லோரிடமும் எல்லாமே இருப்பது இல்லை “மற்றொரு பைன் மரம் இந்த மரத்திற்கு விடை கூறியது.
இந்த இரண்டு மரங்களும் பேசுவதைக் கேட்ட ரோஜாவுக்கு தன்னுடைய அழகைப் பற்றி மிகவும் கர்வம் ஏற்பட்டது. “ நான் தான் இந்தக் காட்டிலேயே மிகவும் அழகானவள் “ என்று கூறியது.
அந்த சூரிய காந்திப் பூ ரோஜாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. “நீ எப்படி அதைக் கூறலாம்? இந்த காட்டில் எண்ணற்ற அழகான மலர்கள் இருக்கின்றன. அதில் நீயும் ஒருத்தி. அவ்வளவுதான். “ என்றது.
“ஆனால், என்னைப் பார்த்தவுடனேயே எல்லோரும் என்னை விரும்ப ஆரம்பிக்கிறார்கள் “ என்று ரோஜா கூறியது. “அந்தக் கள்ளிச் செடியைப் பார். அது எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது ?” முட்கள் மட்டுமே அதன் மேல் இருக்கின்றன. யாருமே அதை புகழ்வது இல்லை “.
“நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் ?” ஆம். அந்த பைன் மரம் இடையில், குறுக்கிட்டுக் கேட்டது. “உனக்கும்தான் கூட முட்கள் இருக்கின்றன ! ஆனால், இப்போதும் நீ அழகாகத்தான் இருக்கிறாய் “ என்று பைன் மரம் கூறியது.
இதைக் கேட்டவுடன் ரோஜா கோபம் அடைந்தது. “உனக்கு அழகு என்பதன் பொருள் கூட இன்னும் தெரியவில்லை. நீ என்னுடைய முட்களையும், கள்ளிச் செடியின் முட்களையும் ஒப்பிட்டுக் கூறாதே. நாங்கள் மிகவும் வித்தியாசம் ஆனவர்கள்! நான் அழகாக இருக்கிறேன், அது அப்படியல்ல “.
“நீ மிகவும் கர்வம் பிடித்தவளாகி விட்டாய், ரோஜா “ இதைக் கூறிக் கொண்டே, அந்த பைன் மரம் தன்னுடைய கிளைகளை வேறு பக்கமாக வளைத்துக் கொண்டது. இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தும், அந்தக் கள்ளி செடியானது அமைதியாகவே இருந்தது. ஆனால் அந்த ரோஜாச் செடி தன்னுடைய வேரை எடுக்க முயற்சி செய்தது; அந்தக் கள்ளிச் செடியின் அருகே தான் நிற்பதை விரும்பாமல், இவ்வாறு செய்தது; ஆனால் அது முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்த பிறகு, ரோஜா கோபத்தோடு கள்ளிச் செடியைப் பார்த்து, “நீ ஒரு உபயோகம் இல்லாத தாவரம். உன்னிடம் அழகும் இல்லை; எந்த விதமான பயனும் இல்லை. நான் உன் அருகே இருப்பதற்கு நான் வருந்துகிறேன் “ என்றது.
ரோஜாவின் வார்த்தைகளால், கள்ளிச் செடி வருத்தம் அடைந்தது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் கூறியது, “கடவுள் யாருக்குமே ஒரு அர்த்தம் இல்லாத வாழ்க்கையைக் கொடுக்க மாட்டார் “.ரோஜா அந்தக் கள்ளிச் செடியை அலட்சியப்படுத்தியது.
கால நிலை மாறியது; கோடை காலம் வந்தது. கதிரவனின் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியது. மரங்கள், தாவரங்கள் வாடத் தொடங்கின . ரோஜாவும் வாட ஆரம்பித்தது.
ஒரு நாள், ஒரு பறவை கள்ளிச் செடியின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்ததை ரோஜா பார்த்தாள். அந்தப் பறவை தன் அலகை, செடியின் கிளைக்குள் வைத்திருந்ததையும் பார்த்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து பறந்தது. அந்தப் பறவை தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டது தெரிந்தது. பறவை கள்ளிச் செடியின் மீது அமர்ந்து, என்ன செய்து கொண்டிருந்தது என்பதை, ரோஜாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் பைன் மரத்திடம், “அந்தப் பறவை என்ன செய்து கொண்டிருந்தது ?”என்று கேட்டாள். பைன் மரம்,“அந்தப் பறவை கள்ளிச் செடியிடம் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தது “ என்று கூறியது.
“ ஓ, ஆனால், இந்தப் பறவை தன் அலகினால், கள்ளிச் செடியை காயப்படுத்தி இருக்குமே “ என்று ரோஜா கேட்டாள். “நிச்சயமாக இது காயப்படுத்தி இருக்கிறது. ஆனால், அந்த இரக்க குணம் வாய்ந்த கள்ளிச் செடியால், பறவையின் துன்பத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை “ என்று பைன் மரம் பதில் அளித்தது.
“ ஓ, இந்தக் கோடையில் கூட கள்ளிச் செடியிடம் தண்ணீர் இருக்கிறது. நான் இங்கு தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கிறேன் “ என்று ரோஜா வருத்தம் அடைந்தது.
“நீ ஏன் கள்ளிச் செடியிடம் உதவி கேட்கலாமே ? அவன் நிச்சயமாக உனக்கு உதவி புரிவான். அந்தப் பறவை தன் அலகில் தண்ணீரை நிரப்பி, அதை உன்னிடம் கொண்டு வந்து தரும் “என்று பைன் மரம் அறிவுரை கூறியது. தன்னுடைய அழகின் கர்வத்தால், ரோஜா கள்ளிச் செடியை மிகவும் தரக்குறைவாகப் பேசியதால், ரோஜாவால் எப்படி கள்ளிச் செடியிடம், உதவி கேட்க முடியும் ? ஆனால், இறுதியாக ஒரு நாள் ரோஜா, கள்ளிச் செடியிடம், “இந்தக் கடுமையான சூரிய வெப்பத்தில் இருந்து, என்னைக் காப்பாற்று“ என்று உதவி கேட்டது.
கள்ளிச் செடி இரக்கமே உருவானது. அது, உடனே உதவி செய்ய சம்மதித்தது. அந்த பறவையும் உதவி செய்ய முன் வந்தது. அது தண்ணீரை கள்ளிச் செடியிடம் இருந்து உறிஞ்சி எடுத்து, தன் அலகில் நிரப்பி, ரோஜா செடியின் வேர்களில் ஊற்றியது. அந்த ரோஜாச் செடி மீண்டும் புத்துயிர் பெற்றது.
ஒருவரது வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து, ஒருவரைப் பற்றிய கருத்தை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ரோஜாச் செடி கள்ளிச் செடியிடம் மன்னிப்புக் கோரியது.
ஒருவருடைய முகத்தைப் பார்த்து நாம் எந்தக் கருத்தையும் உருவாக்கிக் கொள்ள கூடாது. மனிதனுக்கு வெளி அழகு அழகல்ல, உள்ளிருக்கும் அழகுதான் உண்மையானது.
அனைவருமே, வித்தியாசமான குண நலன்களால், கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். நம்மைப் பற்றி நாமே கர்வப்பட்டுக் கொள்ளக் கூடாது. ஒருவருக்கொருவர் உதவி செய்வதில்தான் வாழ்க்கை முன்னேறிச் செல்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக