தயவு செய்து இந்த உண்மையான கதை முழுவதையும் இன்று நீங்கள் கண்களை மூடுவதற்கு முன்பாகவும், நாளை அதனை திறப்பதற்கு முன்பாகவும் வாசித்து விடுங்கள். யாரோ ஒருவருடைய அதிசயமான அனுபவம் இங்கே பகிர்ந்து கொள்ளப் பட்டது.
பார்வை இழந்தோர் மையத்தில் நடக்கும், பார்வை இழந்தோரின் நன்மைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளச் சென்றேன்.
வழக்கம் போல, அந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலையில் நடப்பதாக இருந்த காரணத்தால், நான் முதலில் அந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என நினைத்தேன். இது போரடிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக் கூடும் என்பதால், நான் அன்று மாலைப் பொழுதை உற்சாகமாக வேறு விதமாக செலவிடலாம் என்று நினைத்தேன்.
தனியாக இருப்பதாலும், நேரத்தை எப்படி செலவழிப்பது என தெரியாததாலும் முடிவாக இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு செல்வதற்காக ஆன்லனில் புக் பண்ணி, ரிஜிஸ்டர் செய்தேன்.
நான் அங்கு சென்ற போது, ஏறக்குறைய 40 பேர் இருந்தனர். முதன் முதலில், எங்களுக்கு ஒரு வீடியோ காண்பிக்கப்பட்டது. அது அந்த மையத்தைப் பற்றியது. 15 நிமிட வீடியோ அது. அது மிகவும் ஈர்க்கும்படியாக இருந்தது. பலதரப்பட்ட மக்கள் அங்கு வந்து, இந்த பார்வையற்றவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் நேரத்தை செலவு செய்து சென்றனர். எதையுமே பதிலுக்கு எதிர்பார்க்காமல் உதவி செய்தனர்.
இந்த வீடியோ முடிந்தவுடன் நாங்கள் அனைவரும் அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு ஹாலில் கூடினோம்.
அடுத்த நிகழ்ச்சி,“ *இருட்டில் ஒரு விருந்து*” என்பது பற்றியதாகும்..
இந்த நிகழ்ச்சி ஈர்ப்பு உடையதாகவும், பகிர்ந்து கொள்ள மதிப்பு மிக்கதாகவும் இருந்தது.
அது என்ன வென்றால், “எங்கள் 40 பேருக்கும் கும்மிருட்டான ஒரு ஹாலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
அடுத்த 2 மணி நேரமும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு, உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு இருந்தன. இவை அனைத்துமே மூன்று பார்வையற்ற இளம் வயதினரால் ஆக்கப்பட்டு இருந்தன.
ஒரு இளம் பெண் இந்த நிகழ்ச்சியின் தலைமைப் பொறுப்பையும், மற்ற இரண்டு வாலிபர்கள் அவளுக்கு உதவியாளராகவும் இருந்தனர். இவர்கள் மூவரும், சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டார்கள்.
அந்த தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்தப் பெண் முதலில் அந்த விருந்தைப் பற்றிய குறிப்புக்களை எங்களுக்குக் கூறினாள்.
(இவை எல்லாம் விழியற்றவர்களுக்கான உண்மையான நடவடிக்கைகள். அவர்கள் இதனைப் பின்பற்றி நடந்தால், அவர்கள் வாழ்க்கை எளிதாக இருக்கும்.)
1. நீங்கள் உங்களுக்குரிய மேசையின் முன்பு உட்கார வேண்டும். அதில் பொருட்கள் பின் வருமாறு வைக்கப்பட்டு இருக்கும்.
(அந்த மேசை வட்ட வடிவில் இருக்கும். அதை நாம் ஒரு கடிகாரமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்.)
3 மணியில் - உணவும், ஸ்பூனும்
9 மணியில் - போர்க்
12 மணியில் - பவுல்
2 மணியில் - ஒரு காலியான கண்ணாடி கிளாஸ்
6 மணியில் - பேப்பர் நாப்கின்
2. இரண்டு பெரிய ஜக்குகள் உங்களை சுற்றிக் கொண்டே வரும். ஜக்கின் வெளிப்பகுதி ப்ளைனாக இருந்தால் அதில் தண்ணீரும், வளைந்து இருந்தால் அதில் ஆரஞ்ச் ஜூஸும் இருக்கும்.
3. உங்களுக்கு ஜக்கு கிடைத்தவுடன் நீங்கள் உங்கள் கிளாஸில் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆள்க்காட்டி விரலை கிளாஸிற்குள் வைக்க வேண்டும். நீங்கள் ஜக்கில் இருந்து கிளாஸில் ஊற்றும் போது, அந்த ஜூஸ் உங்களுடைய விரலைத் தொட்டவுடன் ஊற்றுவதை நிறுத்தி விடலாம்.
உங்கள் அனைவருக்கும் புரிந்ததா? என்று அவள் கேட்டாள்.
அனைவருமே, ‘ஆமாம்’ என்று கூறினர். ஆனால், எல்லோருமே குழப்பம் அடைந்தே இருந்தனர். அவள் கூறியதை ஞாபகப் படுத்திட முயற்சி செய்யும் பொருட்டு ஒருவருக்கு ஒருவர் பேசி உறுதிப் படுத்திக் கொண்டனர்.
அடுத்த 1 மணி 30 நிமிடங்கள் முழுவதும் வேடிக்கையாகவும் இருந்தது; அதிலிருந்து கற்றுக் கொள்ளவும் முடிந்தது. முழுவதும் கும்மிருட்டான அறையில், எதையுமே நாங்கள் பார்க்கமுடியாமல் இருக்கும்போது, நாங்கள் பல்வேறு வகையான உணவு வகைகளை பார்க்காமலேயே சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தோம்.
முதன் முதலாக, எங்கள் 40 பேரையும் குழுக்களாக, அந்த இருட்டு ஹாலுக்குள் அழைத்து செல்லப்பட்டோம். அந்த கண் பார்வை இல்லாத இளம் பெண்ணோ, இளைஞனோ, எங்கள் ஒவ்வொருவரையும் வழி நடத்தி அழைத்துச் சென்று நாற்காலியில் அமரச் செய்தனர். எங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால், நாம்தான் பார்வை இழந்தவர்களுக்கு உதவி பண்ணி, அவர்கள் அடைய வேண்டிய இடத்திற்கு வழிகாட்ட வேண்டும்.
பிறகு, அந்த 3 பார்வையற்றவர்களால் எங்களுக்கு முழு விருந்து ஒன்று பரிமாறப் பட்டது. குடிப்பதற்கான பானங்கள், சிறுசிறு உணவு வகைகள், சால்ட்டுகள், முக்கியமான உணவு வகைகள் மேலும் இனிப்புகள் என விருந்து அமர்க்களப்பட்டது.
இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், அந்த மூன்று பேரும், சைவ உணவு யாரெல்லாம் விரும்பினார்களோ, அவர்கள் மேசையின் முன்பாக அதனை மிகவும் சரியாகக் கொண்டு வந்து வைத்தனர். நாங்கள் அந்த அறையில் ஒழுங்கற்ற முறையில்தான் ஆங்காங்கே அமர்ந்திருந்தோம்.
ஆன் லைனில் பதிவு செய்யும் போதே சைவமா, அசைவமா என்பதனைக் குறிப்பிடும்படி எங்களைக் கேட்டுக் கொண்டனர். நான் சைவ உணவை தேர்ந்தெடுத்தேன். எங்களுக்கு விருந்தோம்பல் நல்ல முறையில் நடந்தது. நாங்கள் காத்திருக்க வேண்டிய தேவையே இல்லாமல், உணவு பரிமாறப்பட்டது. நாங்கள் ஒன்றை சாப்பிட்டு முடித்ததும், எந்தவித தாமதமுமின்றி அடுத்த வகை உணவு, பரிமாறப்பட்டது.
தோராயமாக, 1 மணி 30 நிமிடம் இருட்டினில் விருந்து முடிந்த பிறகு, அந்த தலைவி நீங்கள் அனைவரும் உங்கள் உணவை சாப்பிட்டு முடித்து
விட்டீர்களா என்று கேட்டாள். அதை உறுதிப் படுத்திய பிறகு, சுவிட்சைப் போட்டு விளக்குகளை எரிய விட்டாள். நீங்கள் அனைவரும் வெளியே போகலாம் என்றாள்.
சிறிது நேரத்திற்கு யாருமே அசைய வில்லை. நாங்கள் அனைவரும் அந்த அறையை ஆச்சரியத்தோடு சுற்றிப் பார்த்தோம். பிறகு நாங்கள் அனைவரும் எழுந்து மெதுவாக வெளியேற ஆரம்பித்தோம். அந்த குழுவினருக்கு நன்றி கூறிக் கொண்டே வெளியே வந்தோம். அந்த அறையை விட்டு வெளியேறும் போது கண்களில் கண்ணீருடனும், எங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தெள்ளத் தெளிவான கண்ணோட்டத்துடனும் இருந்தோம்.
நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை உணர்ந்தோம். இந்த அழகான உலகை காண்பதற்கு நமக்கு அழகான கண்கள் பரிசாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த பார்வையற்றவர்களின் வாழ்க்கையும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையும் எவ்வளவு தூரம் கஷ்டமானது என்பதையும் உணர்ந்தோம். அந்த பார்வையற்றவர்களால், இந்த உலகத்தில் உள்ள எதையுமே பார்க்க முடிவதில்லை.
ஒரு இரண்டு மணி நேரம் அந்த இருட்டு அறையில் எதுவுமே பார்க்க முடியாமல் இருக்கும் போது வசதிக்குறைவாக உணர்ந்தோம். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் வாழ்ந்தே ஆக வேண்டும்.
நாம் எவ்வளவு தூரம் கொடுத்து வைத்தவர்கள் என்பதை உணர்ந்தோம். எளிமையாக எதுவும் நமக்கு கிடைத்து விடுகின்ற காரணத்தால், அதன் மதிப்பை நாம் சரிவர தெரியாமல் போகிறோம்.
நாம் சில சமயங்களில் சத்தமாக கதறி அழுகிறோம். சில வேளைகளில் மனதுக்குள் அழுகின்றோம். வாழ் நாள் முழுவதும் நம்மிடம் இல்லாததை தேடி ஓடிக் கொண்டே இருக்கின்றோம். நம்மிடம் இருக்கும் அனைத்தையும் புகழ்வதற்கு நேரம் இல்லாமல், இல்லாத ஒன்றைத் தேடி ஓடுகின்றோம்.
எப்போதுமே உற்சாகமாக இருந்திடுங்கள்..
உங்கள் கண்கள் நிரந்தரமாக மூடிடும் முன்பாக, இன்றே, உங்கள் கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.
உங்களை நேசிக்கும் மக்களை, போற்றிடுங்கள். இதயத்தில் இருந்து, அவர்களிடம் இன்றே பேசுங்கள்.
நீங்கள் விரும்பும் மனிதர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள தவறான புரிதல்களை விரைவில் உடனே, சரி செய்து விடுங்கள்.
இங்கு, பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே, உங்கள் வாழ்க்கையை மதிப்பு மிக்கதாக தயார் செய்திடுங்கள்.
உங்களுடைய கண்களின் பார்க்கும் திறனால், உங்கள் வாழ்க்கையை பூரணத்துவம் அடையச் செய்யுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக