முன்னொரு காலத்தில் சூஃபி மறைஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வழக்கமாக தன் பிரார்த்தனையை இப்படி செய்வார் –“கடவுளே, நீ எனக்கு செய்யும் அனைத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் செய்யும் நன்மைகளை என்னால் எப்போதாவது திருப்பிக் கொடுக்க முடியுமா? நான் நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்”.
ஒரு முறை அவர் வெகு தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மூன்று நாட்களாக அங்கிருந்த மக்கள் இவருக்கு தங்க இடம் கொடுக்க மறுத்தனர். இவர் நல்ல மனிதர் என அவர்கள் நம்பவும் மறுத்தனர். அவருக்கு உணவும், தண்ணீரும் கூட கொடுக்க மறுத்தனர். அந்த மூன்று நாட்கள் முழுவதும் பசியோடும், தாகத்தோடும் சுற்றி அலைந்து கொண்டிருந்தார்.
மூன்று நாட்களாக பசியும், தாகமும் வாட்டிய போதும் கூட பிரார்த்தனையைத் தொடர்ந்தார். அவர் இரவில்,“ கடவுளே நன்றி ! என்னால் எப்படித் திருப்பிக் கொடுக்க முடியும் ? நான், நன்றியுணர்வை மிகவும் உணர்கிறேன்.”
அவருடன் பயணம் செய்த சீடர்களில் ஒருவர், இவர் இவ்வாறு பிரார்த்தனை செய்வதை பார்த்து விட்டு, குருவே, தயவு செய்து நான் சிறிது பேசலாமா? என்றார். நீங்கள் எதற்காக நன்றி கூறிக் கொண்டு இருக்கிறீர்கள்? மூன்று நாட்களாக நாம் தங்குவதற்கு இடமும் இல்லாமல், பசியோடும், தாகத்தோடும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம். இந்த காட்டு விலங்குகளின் கருணையினால் நாம் இருக்கிறோம். ஆகவே என்ன காரணத்திற்காக நீங்கள் நன்றியுணர்வோடு இருக்கிறீர்கள்?
அந்த மறை ஞானி புன்சிரிப்போடு கூறினார், “உன்னால் இதைப் புரிந்து கொள்ள முடியாது - மூன்று நாட்களாக உண்ணவும், குடிக்கவும் ஏதும் இல்லாமல் இருப்பது என்பது, எனக்குக் கண்டிப்பாகத் தேவைப்பட்டு இருக்கிறது. கடவுள் எனக்கு என்ன தேவையோ அதை எப்போதும் கொடுப்பார். இந்த பசியும், தாகமும் எனக்குத் தேவைப் பட்டதால் அதையும் கொடுத்து விட்டார்.
இந்த மூன்று நாட்களும் எனக்குத் தேவைப் பட்ட நேரமாக இருந்திருக்கிறது, இல்லை எனில் ‘அவர்’ இதை எனக்கு கொடுத்திருக்க மாட்டார். இதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
கடவுள் எப்போதுமே என்னைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறார். என்னுடைய ஆசைகளைப் பற்றி அவர் கவலைப் படுவது இல்லை. எனக்கு எது சரியான தேவை என்பதை உணர்ந்து அதை எனக்குக் கொடுப்பார்.
நான் அவருக்கு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறேன். ஏனென்றால், உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல், தங்க இடம் இல்லாமல், மூன்று நாட்களாக பாலை வனத்தில், திறந்த வெளியில், வானத்து நட்சத்திரங்களின் அடியில், தூங்கிக் கொண்டு இருக்கும் போதும் கூட, நம்மை எந்த காட்டு விலங்குகளும் தாக்கவில்லை.
நீ வருத்தப்படுகிறாயா? எதற்காக? இதுதான் நமது உண்மையான தேவையாக இருந்திருக்கிறது!
இதுதான், உண்மையான பற்றுறுதி என்பது. இது இதயபூர்வமான நன்றியுணர்வு. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு சூழலையும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டு வாழ்வதுதான் ஒரு உண்மையான இதயத்தின் பெருந்தன்மையாகும். பெருந்தன்மையான இதயம் கொண்ட ஒரு மனிதனால், தன் வாழ்க்கையின் உண்மையான லட்சியத்தை நோக்கி முன்னேற முடியும்.
இப்போது அந்த சீடரின் முகத்தில் திருப்தி தென்பட்டது. லட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான ரகசியத்தை குருவின் இந்த வார்த்தைகள் அவருக்கு வெளிப்படுத்தின.
கருத்துகள்
கருத்துரையிடுக