ஒரு சமயம் நீதிமன்றம் அதன் வீரர் ஒருவருக்கு தண்டனை விதித்தது; அவர் அரைக் கிலோ சுண்ணாம்பை உண்ண வேண்டும், என்பதே தண்டனை. வெற்றிலை பாக்கு போடும் போது, சுண்ணாம்பு சிறிது அளவு பயன்படுகிறது என்றாலும், ஒரே நேரத்தில் அரைக் கிலோ சுண்ணாம்பை வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும் என்றால், அவ்வாறு சாப்பிடுபவர் உயிர் பிழைப்பது சாத்தியம் அற்றது. ஆகவே, அவர் உறுதியாக ஒரு மாபெரும் தவறினை செய்திருக்க வேண்டும்.
அந்த வீரர் சுண்ணாம்பை வாங்கி வர வேண்டும்; அடுத்த நாள் நீதி மன்றத்தில் முழுவதுமாக வாயில் போடப்பட்டாக வேண்டும்; ஆகவே அவர் ஓரு வெற்றிலை பாக்குக் கடைக்கு, அதனை வாங்குவதற்கு சென்றார். ஆனால், இவ்வளவு அதிகச் சுண்ணாம்பை அவர் கேட்டவுடன் கடைக்காரர் அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்காரரின் மனதில் கொஞ்சம் சந்தேகம் எழுந்திடவே, இவ்வளவு அதிக அளவிலான சுண்ணாம்பு வாங்குவதன் காரணத்தை கேட்க ஆரம்பித்தார். அந்த வீரர் சோகமான குரலில், “அடுத்த நாள் அவ்வளவு சுண்ணாம்பையும் நான் வாயில் போட்டு சாப்பிட்டாக வேண்டும். இதுதான் தண்டனை” என்றார்.
கடைக்காரர் வீரரிடம், “பிரச்சனையே இல்லை. அது தொடர்பாக நான் உனக்கு உதவுகிறேன். முதலில் சென்று ஒரு அரைக்கிலோ நெய் கொண்டு வா “ என்றார்.
வீரருக்கு ஒரு நம்பிக்கைக் கீற்று தென்பட்டது. அவர் உடனே சென்று நெய்யை வாங்கினார்.
அரைக் கிலோ சுண்ணாம்பினை வீரரிடம் கொடுக்கும் போது, கடைக்காரர் அவருக்கு ஒரு அறிவுரைக் கொடுத்தார். “நீதி மன்றம் புறப்படும் முன்பாக, இந்த நெய்யை குடித்து விட்டு கிளம்பு; அதற்குப் பிறகு, உனது தண்டனையின் படி, அங்கே சுண்ணாம்பை சாப்பிடு. உடனடியாக எந்த விதமான தாமதமும் இன்றி வீட்டுக்குத் திரும்பிவிடு; இது உன்னைக் காப்பாற்றும்.“
இப்போது, நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனுக்கு ஒரு மிதக்கும் குச்சி கிடைத்தது!
மிகுந்த நம்பிக்கையோடு வீரர் வீடு சென்றார். அடுத்த நாள் கடைக் காரர் கூறியபடி அவர் அப்படியே செய்தார். அரைக் கிலோ நெய்யைக் குடித்துக் கொண்டார்; வீட்டை விட்டு கிளம்பினார். நீதிமன்றம் மக்களால் நிரம்பப்பட்டு இருந்தது. தண்டனையின் படி, அவர் அரைக்கிலோ சுண்ணாம்பை அவர்கள் முன்னிலையில் சாப்பிட்டு விட்டார். சுண்ணாம்பைத் தின்று முடித்ததும், அவரது தண்டனை நிறைவேற்றப் பட்டு விட்டது; வாழ்க்கையின் இறுதிக் கணங்களை அவர் தன் குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதற்காக, அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வீடு சென்றவுடன், நெய்யும் சுண்ணாம்பும் கலந்த எல்லாவற்றையும் வாந்தி எடுத்தார். சற்று பலவீனமாக இருப்பதை அவர் உணர்ந்தார்; என்றாலும் அடுத்த நாள் காலை, எல்லாமும் சரியாகி விட்டது. ஆகவே அவரது வழக்கப்படி, வேலைக்காக நீதி மன்றம் வந்து சேர்ந்தார். முந்தைய நாள் சுண்ணாம்பைத் தின்றவர் எவ்வாறு இப்படி உயிர் பிழைத்தார் என்று அனைவருமே திகைப்புற்றனர். அரண்மனை முழுவதும், இந்த செய்தி விரைந்து பரவியது; அக்பரையும் அந்த விஷயம் சென்று சேர்ந்தது.
அக்பருக்கும் மிகுந்த ஆச்சரியம்; உடனடியாக அந்த வீரரை சபைக்கு அழைத்தார்; வீரர் வந்தார். நேர்மையாக கதை முழுவதையும் வீரர் விவரித்துக் கூறினார். கடைக்காரர், நெய் மற்றும் வாந்தி இவற்றைப் பற்றி விளக்கினார்.
கடைக்காரரின் முன்னோக்கு திறன், விவேகம் பற்றி அக்பர் திகைப்புற்றார். அவர் கடைக்காரரை தனது சபைக்கு வரவழைத்தார்; அத்துடன் நில்லாது, அவரை தனது ராஜ்ய சபையில் ஒரு உறுப்பினர் ஆக்கினார். “வாஸிர் – இ – அஸாம் “ என்ற பதவியை வழங்கினார்.
அந்தக் கடைக் காரரின் பெயர், “மகேஷ் தாஸ்”. அந்தப் பெயரை அக்பர், “பீர்பால்” என்று மாற்றினார். அதன் பொருள் “வலிமையான மனம் கொண்ட மனிதர் “. மிகுந்த விருப்பத்துடன், பீர்பால் அக்பர் அவையில் உள்ள நவரத்தினங்களில் ஒருவரானார்.
இது மட்டுமல்லாது, ஒரு நாள் அவருக்கு ‘அரசர்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வாழ்க்கையில், நமது முன்னேற்றம் என்பது, மெய்யாகவே நாம் எந்த வகையான மக்களை தொடர்பு கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது; காரணம் என்னவென்றால், நமது சுற்றுச் சூழல் நேரடியாக நமது வாழ்க்கையின் முறையை பாதிக்கிறது; நமது வாழ்க்கை முறை, நமது விதியை வடிவமைக்கிறது. நாம் பாரபட்சமற்ற பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்; உண்மையான திறமையை அடையாளப்படுத்த வேண்டும். மேலும் ஒரு பெருந்தன்மையான இதயம், அவற்றை மதித்து, அவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக