*கருப்பு பெல்ட் வாங்குவதன் பொருள் என்ன?*
ஒரு தற்காப்பு கலைஞன் பல வருடங்களாக கடினமாக பயிற்சி செய்தான். அவன் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். அந்த பெல்ட் அவனுக்கு ஒரு கராத்தே ஆசிரியரால் (Sensei – Karate Teacher in Japanese ) விழா ஒன்றில் கொடுக்கப் படுவதாக இருந்தது. அந்த விழா அன்று அந்த இளம் கலைஞன் கருப்பு பெல்டை பெறுவதற்காக அந்த ஆசிரியர் முன்பு வந்தான்.
பெல்டைப் பெறுவதற்கு முன்பு, உனக்கு மற்றொரு தேர்வு வைக்கப் போகிறேன் என்றார் ஆசிரியர்.
“நான் தயாராக இருக்கிறேன்” என்று அந்த இளைஞன் எந்தவித தயக்கமும் இன்றி, முழுமையான நம்பிக்கையுடன் பதில் கூறினான். யாருடனாவது போட்டியிடச் சொல்வார் என அவன் நினைத்தான். ஆசிரியர் மனதில் வேறு ஏதோ இருப்பதை அவன் அறியவில்லை.
தேர்வு என்னவென்றால், ஆசிரியர் அவன் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் என விரும்பினார். இந்த கருப்பு பெல்டை பெறுவதன் உண்மையான பொருள் என்ன? --இதுதான் கேள்வி.
“என்னுடைய பயணத்தின் முடிவில், என்னுடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி “ என்று இளைஞன் பதில் கூறினான்.
இந்த பதிலுக்கு ஆசிரியர் திருப்தி அடையவில்லை. அவர் சொன்னார், “நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தகுதியுடையவன் ஆகவில்லை. ஒரு வருடம் கழித்து திரும்பி வா“ என்றார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் கருப்பு பெல்ட் பெறுவதற்காக வந்தான். இந்த முறையும் ஆசிரியர் அதே கேள்வியை திரும்பவும் கேட்டார். “இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன?” .
“இது இந்த கலையின் சிறந்த சாதனைக்கான அடையாளம் “ என்று இளைஞன் பதில் கூறினான்.
ஆசிரியர் இப்போதும் திருப்தி அடையவில்லை. அவர் அந்த இளைஞனிடம் இருந்து கூடுதலான பதிலை எதிர்பார்த்தார்; அந்த இளைஞன் அமைதியாக இருந்தான்.
“நீ இன்னும் கருப்பு பெல்ட் வாங்குவதற்கு தயாராக இல்லை. இப்போது போய் விட்டு அடுத்த வருடம் வா” என்று கூறி அந்த இளைஞனைத் திருப்பி விட்டார்.
ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த இளைஞன் திரும்பவும் ஆசிரியர் முன் வந்தான். அந்த ஆசிரியர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.
“ இந்த கருப்பு பெல்டை வாங்குவதன் உண்மையான பொருள் என்ன? “.
“ஒரு போதுமே முடிவுறாத ஒரு பயணத்தின் தொடக்கமே இந்த கருப்பு பெல்ட். ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னால் இருந்ததை விட மேலும் சிறந்ததாக ஆவதற்கு வலுயுறுத்துவது – ஆகிய மூன்றும் இதில் அடங்கியுள்ளன என்று முழு நம்பிக்கையுடன் இளைஞன் பதில் கூறினான்.
இறுதியாக, ஆசிரியரின் கண்களின் பிரகாசம் தெரிந்தது; அவர் எதிர்பார்த்த பதிலை அந்த இளம் கலைஞரிடம் இருந்து பெற்று விட்டார். முகத்தில் புன் சிரிப்போடு ஆசிரியர் கூறினார்,“ மிகவும் சரியான பதில்! இப்போது கருப்பு பெல்டை வாங்குவதற்கு நீ தகுதியுடையவனாகி விட்டாய். இப்போது இந்த மதிப்பு மிக்க பரிசை எடுத்துக் கொண்டு, உன்னுடைய வேலையை நன்கு செய்வாயாக” என்று வாழ்த்தினார்.
நண்பர்களே, சில சமயங்களில் மிகப்பெரிய சாதனைக்குப் பிறகு, நாம் ஒரு சிறிய அளவு அகங்காரத்திற்கு ஆளாகி அமைதி அடைகிறோம். புகழ் அல்லது சாதனையின் உச்சியை சென்று அடைவது எளிது; ஆனால் அந்த வெற்றியில் நிலையாகத் தங்கி இருப்பது எளிதல்ல. இதற்குக் காரணம் அந்த அகங்காரம்தான். வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றால் கடின உழைப்பு மட்டும் போதாது. அத்துடன் ஒழுக்கம், உள்ளார்ந்த பணிவை வளரச் செய்தல், இதயத்தில் நன்றியுணர்வு இவையாவும் இன்றியமையாதவை.
கருத்துகள்
கருத்துரையிடுக